search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெயில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஈரோட்டில் வியாபாரிகள் பந்தல்கள் அமைப்பு
    X

    வெயில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஈரோட்டில் வியாபாரிகள் பந்தல்கள் அமைப்பு

    • தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெயில் வாட்டி வருகிறது.
    • ஈரோட்டில் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தினமும் வெயிலின் அளவு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் காலையிலேயே வெயில் காரணமாக வெப்பத்தின் தாக்கம் ஆரம்பித்து மாலை 6 மணிக்கு பிறகும் நீடிக்கிறது. ஆனால் பகல் நேரங்களில் வெயில் கடுமையாக உள்ளது. இதனால் மதிய நேரத்தில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து தற்போது 109 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெயில் வாட்டி வருகிறது. மேலும் இந்திய அளவில் வெப்பநிலை பதிவில் முக்கிய இடம் பிடித்து வருகிறது.

    இதனால் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெயில் தாக்கம் மிகவும் அதிகளவில் வாட்டி வதைக்கும் வகையில் இருந்து வருகிறது. இதனால் ஈரோட்டில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    வாகன ஓட்டிகளும் வெளியே செல்வதை தவிர்த்து வருகிறார்கள். வெயில் காரணமாக வெளியே செல்லும் பெண்கள் முகத்தில் துணியும் அணிந்த படியும், குடை பிடித்து கொண்டும் சென்று வருகின்றனர்.


    ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பழங்கள் விற்பனை கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ரோட்டோரங்களில் ஜூஸ் கடைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, சாத்துக்குடி, மொலாம் பழம், தர்பூசணி ஆகிய பழ வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் ஈரோட்டில் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். ரோடுகளில் அனல்காற்று வீசுகிறது. இதனால் ஈரோட்டில் பல பகுதிகளில் கடை மற்றும் வீடுகள் முன்பு தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் ஈரோடு மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோட்டில் அதிகபடியான வெயில் வாட்டி வருவதால் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கடை வீதி பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள் பந்தல்கள் அமைத்துள்ளனர். மேலும் ஈரோடு திருவேங்கடம் வீதியில் தென்னங்கீற்று பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளது. முக்கிய பகுதிகளிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.

    இதே போல் ஈரோட்டில் பல பகுதிகளில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி மற்றும் பல அரசு அலுவகங்களிலும் தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதில் தண்ணீர் குடித்து விட்டு செல்கிறார்கள்.

    மேலும் ஈரோட்டில் மூலப்பட்டறை வ.உ.சி.பார்க் ரோடு, கருங்கல்பாளையம், பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் முன்பும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் கடை வைத்து இருப்பவர்கள் தண்ணீர் கேன் வைத்து உள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களுக்கு கேன்கள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறார்கள்.

    Next Story
    ×