search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    காயல்பட்டினத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனையில் கலந்து கொண்ட கூட்டத்தினரில் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.
    X
    காயல்பட்டினத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனையில் கலந்து கொண்ட கூட்டத்தினரில் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

    காயல்பட்டினத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனை: திரளானவர்கள் கலந்து கொண்டனர்

    காயல்பட்டினத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனை நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த அபூர்வ துஆ பிரார்த்தனையில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பழமைவாய்ந்த மஜ்லிசுல் புகாரி ஷரீப் சபையில் 95-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த மாதம் 2-ந் தேதி முதல் ஒரு மாத காலமாக புகாரி ஷரீப் சபையில் பல்வேறு நிகழ்ச்சிகள் காலையிலும், மாலையிலும் நடைபெற்று வந்தது. இதில் இஸ்லாமிய ஹாமிதிய்யா சன்மார்க்க பள்ளி மாணவர்களின் சொற்பொழிவு, மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று காலை 9 மணியளவில் இஸ்லாமிய சொற்பொழிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக அபூர்வ துஆ பிரார்த்தனை நடந்தது.

    இந்த பிரார்த்தனையை தமிழ் மொழிபெயர்ப்புடன் காயல்பட்டினம் மாதிஹூல் ஜலாலியா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் டி.எஸ்.ஏ. ஜெஸீமுல் பத்ரி ஆலீம் நிகழ்த்தினார்.

    சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த அபூர்வ துஆ பிரார்த்தனை உலக அமைதிக்காகவும், உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்கள் அகன்று போவதற்காகவும், அனைத்து நாடுகளும் சமரசமாக வாழ வேண்டியும், நல்ல மழை வேண்டியும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். மேலும் மாநில தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு, காயல்பட்டினம் நகர செயலாளரும், நகரசபையின் தி.மு.க. தலைவருக்கான வேட்பாளருமான கே.ஏ.எஸ்.முத்து முகமது, திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்கள் செங்குழி ரமேஷ், தெற்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஐ.காதர், காயல்பட்டினம் நகரசபையில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்கள், முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் மீராசாஹிப்,

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில செயற்குழு உறுப்பினர் காயல் இளவரசு, வாவு வஜீஹா பெண்கள் கல்லூரி தலைவரும், முன்னாள் நகரசபை தலைவருமான வாவு செய்யது அப்துர் ரகுமான், முஸ்லிம் ஐக்கிய பேரவை பொதுச்செயலாளர் பாபு சம்சுதீன், காயல்பட்டினம் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங், இன்ஸ்பெக்டர்கள் செந்தில், அய்யப்பன், பாலமுருகன், கவுரி மனோகரி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நிகழ்ச்சிகளை மஜ்லிசுல் புகாரி ஷரீப் சபை நிர்வாகிகள் மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர். தொடர்ந்து மாலையில் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் நேர்ச்சை வழங்கப்படுகிறது.
    Next Story
    ×