search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    இஸ்லாம்
    X
    இஸ்லாம்

    நோயாளிகளை கருணையுடன் அணுகவேண்டும்

    ஒருவர், ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், அவர் அவரிடம் நல்லதைத்தான் பேசவேண்டும். அவருக்கு மன தைரியத்தையும், நம்பிக்கையையும் விதைக்க வேண்டும்.
    நோயாளிகளை நலம் விசாரிப்பது குறித்து இஸ்லாம் அதிகம் ஆர்வமூட்டுகிறது, அதிகம் தூண்டுகிறது. நோயாளிகளை கருணையுடன் அணுகவேண்டும். அவர்களின் நோய் நீங்கிட இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்க வேண்டும்.

    நோயாளிகளை தீண்டத்தகாதவர்களாக நடத்தக் கூடாது. மனித நேயத்துடன் பார்க்க வேண்டும். நோயாளிகளை அணுகுவது மனம் சார்ந்து இருக்க வேண்டும். பணம், பதவி, இனம், மொழி, நிறம், சாதி, மதம் சார்ந்து இருந்துவிடக் கூடாது.

    இது குறித்த நபி மொழிகள் வருமாறு:

    ‘நபி (ஸல்) அவர்கள் ஏழு செயல்களை செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவை: 1) நோயாளிகளை நலம் விசாரிப்பது, 2) இறந்தவரின் இறுதியாத்திரையில் பின் தொடர்ந்து செல்வது, 3) தும்மியவருக்கு ‘உமக்கு இறைவன் கருணைபுரிவானாக’ என்று பிரார்த்திப்பது, 4) ஸலாம் எனும் வாழ்த்துக்கு பதில் கூறுவது, 5) அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு உதவுவது, 6) விருந்தின் அழைப்பை ஏற்றுக் கொள்வது, 7) சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது’. (அறிவிப்பாளர்: பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் யாரேனும் ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றாலோ (அல்லது) யாரேனும் ஒரு நோயாளி, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாலோ, நபியவர்கள் அவருக்காக பிரார்த்திப்பார்கள். நபியின் பிரார்த்தனையின் பயனால் நோயாளியும் நோயிலிருந்து நிவாரணம் அடைந்து விடுவார். நோயாளியின் விஷயத்தில் நபிகளாரின் பார்வையும், அவர்களின் நடத்தையும் இப்படித்தான் அமைந்திருந்தது.

    ஆயிஷா (ரலி) கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், ‘மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே, நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை’ என இவ்வாறு பிரார்த்திப்பார்கள்”. (நூல்: முஸ்லிம்)

    ‘நீங்கள் நோயாளியையோ, இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் ‘ஆமீன்’ அவ்வாறு ஆகட்டும்! என கூறுகின்றனர் என நபி (ஸல்) தெரிவித்தார்கள்’. (அறிவிப்பாளர்: உம்மு சல்மா (ரலி), நூல்: முஸ்லிம்)

    ‘ஒரு முஸ்லிம் தம் முஸ்லிம் சகோதரனைக் காலையில் நலம் விசாரிக்கச் செல்லும்போது மாலை வரை எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் (மறுநாள்) காலை வரை எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பார்கள். மேலும் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு தோட்டம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அலி (ரலி), நூல்: திர்மிதி)

    ஒருவர், ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், அவர் அவரிடம் நல்லதைத்தான் பேசவேண்டும். அல்லதை பேசக்கூடாது. அவருக்கு மன தைரியத்தையும், நம்பிக்கையையும் விதைக்க வேண்டும். அவர் நோயாளியை பயமுறுத்தவோ, அவநம்பிக்கையை ஏற்படுத்தவோ முயலக்கூடாது.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    Next Story
    ×