search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    613 கிமீ ரேன்ஜ்.. 220கிமீ வேகம்.. போர்ஷே மக்கான் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்
    X

    613 கிமீ ரேன்ஜ்.. 220கிமீ வேகம்.. போர்ஷே மக்கான் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்

    • மக்கான் டர்போ மாடலுக்கான முன்பதிவு துவங்கியது.
    • எலெக்ட்ரிக் வடிவில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

    போர்ஷே நிறுவனம் தனது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் - மக்கான் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய போர்ஷே மக்கான் EV இரண்டு 4-வீல் டிரைவ் வேரியன்ட்களில் கிடைக்கிறது. ஒன்று 408 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் மக்கான் 4, மற்றொன்று 639 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் மக்கான் டர்போ ஆகும்.

    புதிய போர்ஷே மக்கான் டர்போ மாடலுக்கான முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கியுள்ளது. இதன் விலை ரூ. 1 கோடியே 65 லட்சம் ஆகும். வினியோகம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என்று தெரிகிறது.


    புதிய மக்கான் 4 மாடலின் விலை மற்றும் இதர விவரங்களை போர்ஷே இதுவரை அறிவிக்கவில்லை. அடுத்த ஆண்டு இறுதி வரை மக்கான் எலெக்ட்ரிக் மாடல் அதன் பெட்ரோல் வெர்ஷனுடன் விற்பனை செய்யப்படும். அதன்பிறகு இந்த சீரிஸ் முழுமையாக எலெக்ட்ரிக் வடிவில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

    எலெக்ட்ரிக் திறன் கொண்ட மக்கான் மாடல் தற்போதைய பெட்ரோல் வெர்ஷனுடன் ஒப்பிடும் போது 103mm நீளமாகவும், 15mm அகலமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஆடி Q6 இ-டிரான் மாடலுடன் உருவாக்கப்பட்டது. இரு கார்களும் பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டுள்ளன.


    வெளிப்புறத்தில் புதிய மக்கான் எலெக்ட்ரிக் மாடலின் ஸ்டைலிங் ஒரிஜினல் மக்கான் மாடலை தழுவியும், டிசைனிங் அம்சங்கள் டேகேன் மாடலை தழுவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் ஹெட்லைட்கள் செவ்வக வடிவிலும், பின்புறம் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. லைட் பார் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய போர்ஷே மக்கான் எலெக்ட்ரிக் மாடல்களில் டூயல் பெர்மனன்ட் சின்க்ரோனஸ் மோட்டார்களும், ஒவ்வொரு ஆக்சில்களிலும் சிங்கில் ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை மக்கான் 4 மாடலில் 408 ஹெச்.பி. பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.2 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 220 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மக்கான் டர்போ மாடலில் இவை 639 ஹெச்.பி. பவர், 1130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 260 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    மக்கான் எலெக்ட்ரிக் கார்களில் உள்ள 95 கிலோவாட் ஹவர் பேட்டரியை 800 வோல்ட் டி.சி. சிஸ்டம் மூலம் 270 கிலோவாட் மூலம் சார்ஜ் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 21 நிமிடங்களே ஆகும். இத்துன் பிரேக்கிங் மற்றும் காரின் வேகத்தை குறைக்கும் போது 240 கிலோவாட் வரையிலான திறன் பெற முடியும்.

    போர்ஷே மக்கான் 4 மாடல் முழு சார்ஜ் செய்தால் 613 கிலோமீட்டர்களும், மக்கான் டர்போ மாடல் 591 கிலோமீட்டர்களும் செல்லும் என WLTP சான்று பெற்றுள்ளன.

    Next Story
    ×