பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தலைவாழை இலை போட்டு விருந்தளித்த போலீசார்
- முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளை கவுரவிக்கும் வகையில், போலீஸ் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அழைத்தார்.
- பொன்னாடை அணிவித்து எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கவுரவப்படுத்தினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 6-ந் தேதி வெளியானது.
இதில் புதுச்சேரியில் ஒரு அரசு பள்ளி உள்பட 55 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்து புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி போலீசார் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவி களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தலை வாழை இலை போட்டு விருந்தளித்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. புதுச்சேரி திருபுவனை போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் திருவண்டார் கோவில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்து முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளை கவுரவிக்கும் வகை யில், திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அழைத்தார்.
அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கவுரவப்படுத்தினார்.
மேலும் தனது கையால் தலை வாழை இலை போட்டு வடை, பாயாசம், கூட்டு, பொரியல், காரக்குழம்பு, சாம்பார், மோர், ரசம் என அறுசுவையோடு உணவு பரிமாறி மாணவ- மாணவி களையும் பெற்றோர்களையும் நெகிழ வைத்தார்.
வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்று லட்சியம் வைத்திருக்கிறீர்களோ அதை நோக்கியே உங்களது பார்வை இருக்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அறிவுரை வழங்கினார்.
இந்தவீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பாராட்டும் குவிந்து வருகிறது.