தமிழ்நாடு

பணி செய்ய விடாமல் தடுத்ததாக டி.டி.வி. தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு

Published On 2024-03-28 04:52 GMT   |   Update On 2024-03-28 04:52 GMT
  • வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
  • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தேனி:

தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டு உள்ளே செல்ல முயன்றனர்.

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்தனர். அன்னஞ்சி விலக்கில் இருந்து 70 கார்கள், 3 ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் டி.டி.வி. தினகரன் மற்றும் அக்கட்சி நிர்வாகி ராம்பிரசாத் உள்பட பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தேனியில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியான வெளியூர் நபர்கள் தங்கி இருந்து தேர்தல் பணியில் ஈடுபடுவதாக மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தங்கி இருந்தார். அ.ம.மு.க. நிர்வாகியான அவர் தேர்தல் செலவுக்காக ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 500 பணத்தை வைத்திருந்தது தெரியவரவே அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News