தமிழ்நாடு

சென்னையில் தடையின்றி குடிநீர் விநியோகம் - குடிநீர் வாரியம் அறிவிப்பு

Published On 2024-05-03 10:45 GMT   |   Update On 2024-05-03 11:02 GMT
  • வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
  • குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் இடையே நிம்மதியடைந்துள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரம்மத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் குடிநீரை விநியோகித்து வரும் நிலையில், கோடை காலத்தில் வறட்சி நிலவும் என்பதால் போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு ஏற்ப மாநகரின் கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் நிலையில், சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் இடையே நிம்மதியடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News