தமிழ்நாடு

தமிழகத்தில் 6-ந்தேதி வரை வெப்ப அலை தாக்கம் இருக்கும்

Published On 2024-05-01 10:26 GMT   |   Update On 2024-05-01 10:55 GMT
  • நாட்டிலேயே அதிக அளவு வெயில் தமிழகத்தில் பதிவாகி உள்ளது.
  • இன்றும், நாளையும், வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

சென்னை:

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது.

வரட்டி வதைக்கும வெப்ப அலை தாக்கம் ஒரு சில மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், டெல்லி போன்ற மாநிலங்களிலும் வெயில் கொளுத்துகிறது. நாட்டிலேயே அதிக அளவு வெயில் தமிழகத்தில் பதிவாகி உள்ளது.

வெப்பநிலை குறித்து தினமும் வானிலை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்கின்றனர். தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரையும் சமவெளி பகுதிகளின் ஒரு சில இடங் களில் அதிகபட்ச வெப்ப நிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை துணை இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், 'வட உள் மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகமாக உள்ளது. தற்போதைய ஆய்வின்படி 4-ந் தேதி வரை வெப்ப அலை தாக்கம் இருக்கும் என்றார்.

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

இன்றும், நாளையும், வெப்பநிலை அதிகமாக இருக்கும். ஒரு சில மாவட்டங்களில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும். 6-ந் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வேலூர், திருத்தணி ஆகிய பகுதிகளில் வெயில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சென்னை மீனம்பாக்கம் 38, 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி உள்ளது. இனி படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மழை பெய்யக்கூடிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறையும், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், தென் தமிழகத்தில் கோடை மழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags:    

Similar News