செய்திகள்
வாக்கு எந்திரங்கள்

வெற்றி யாருக்கு? - வேலூர் தொகுதியில் நாளை ஓட்டு எண்ணிக்கை

Published On 2019-08-08 08:36 GMT   |   Update On 2019-08-08 08:36 GMT
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடந்தது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

மொத்தமுள்ள 14,32,555 வாக்காளர்களில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர்.

ஓட்டு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.



இங்கு துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் 76 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 320 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணும் பணியில் 375க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். ராணுவ வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வாக்குகள் மட்டும் தனியாக வைக்கப்பட்டு இருக்கும். அதில் கியூஆர் கோடு இருக்கும். அந்த கோடு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

அதன்பிறகு 8.30 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முன்னணி நிலவரம் காலை 11 மணிக்கே தெரிந்துவிடும்.

இதற்கான ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வாக்கு எண்ணும் அறையில் 14 டேபிள்கள் வைக்கப்பட்டு ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு மேற்பார்வையாளர், மைக்ரோ அப்சர்வர், உதவியாளர் என 3 பேர் பணியாற்றுவார்கள். மொத்தம் 24 சுற்றுகள் ஓட்டு எண்ணப்படுகிறது.

ஒரு அறையில் தேர்தல் நடத்து அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் இல்லாமல் மொத்தம் 55 பேர் தேர்தல் பணியில் இருப்பார்கள்.

கடைசி 2 சுற்றுக்கு முன்பு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படும். அப்போது தபால் வாக்கு பதிவுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதன்பிறகு மீண்டும் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். அனைத்தும் முடிந்த பிறகு ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.

பின்னர் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் விவிபேட்டில் எந்த சின்னத்துக்கு எத்தனை ஓட்டுகள் பதிவாகி உள்ளது என்பது கணக்கிடப்படும்.

இதில் வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், விவிபேட்டில் பதிவான வாக்குகளுக்கும் இடையில் வேறுபாடு உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்படும். அதில் மாறுபாடு இருந்தால் விவிபேட்டில் பதிவான வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காலை 9 மணியில் இருந்தே முன்னணி நிலவரம் தெரியவரும். 11 மணியளவில் ஓரளவுக்கு வெற்றி வேட்பாளர் விவரம் தெரிந்து விடும்.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி பெறுவாரா? அல்லது தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு வெற்றி கிடைக்குமா? என்ற கேள்விக்கு நாளை விடை கிடைத்து விடும்.

Tags:    

Similar News