செய்திகள்
முத்தரசன்

மக்கள் பிரச்சினையில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது - முத்தரசன் குற்றச்சாட்டு

Published On 2019-07-31 04:41 GMT   |   Update On 2019-07-31 04:41 GMT
மக்கள் பிரச்சினையில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டி உள்ளார்.
ஆம்பூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து ஆம்பூரில் பிரசாரம் மேற்கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் உள்நோக்கத்துடன் தேர்தல் நிறுத்தப்பட்டது.

வேலூர், திருவண்ணா மலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு விவசாயம், குடிநீர் ஆதாரமான பாலாற்றில் கர்நாடக, ஆந்திர அரசுகள் தடுப்பணைகளை கட்டி தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை கிடைக்காமல் செய்துள்ளன. தமிழகத்தின் எல்லை பகுதியில் சுமார் 222 கிலோ மீட்டர் ஓடும் பாலாற்றில் தமிழக அரசு தடுப்பணை கட்ட வேண்டுமென அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்துள்ளன. அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை உயர்த்தி கட்டி வரும் பிரச்சினையை தடுக்க முடியாதவர்கள் ஆட்சியில் இருந்து என்ன பயன். எல்லா பிரச்சினைகளிலும் இரட்டை நிலைப்பாட்டை அ.தி.மு.க. அரசு கடைபிடிக்கிறது. இரட்டை தலைமை கொண்ட கட்சியாக இருக்கலாம். அது அவர்கள் விருப்பம்.

முத்தலாக் பிரச்சினையில் தேனி தொகுதி எம்.பி. மக்களவையில் ஆதரித்து பேசுகிறார். மாநிலங்களவையில் நவநீதருஷ்ணன் எதிர்த்து பேசுகிறார். புதிய கல்விக் கொள்கை, ஹைட்ரோகார்பன் திட்டம், 10 சதவீத இடஒதுக்கீடு ஆகியவற்றில் இரட்டை நிலைப்பாட்டை அ.தி.மு.க. அரசு கடைபிடிக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள், நலன்கள் மத்திய அரசால் பறிக்கப்படுகிறது. எனவே நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதை போல வேலூர் தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News