இந்தியா

துபாயில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூர் வருவதாக தகவல்

Published On 2024-05-05 07:46 GMT   |   Update On 2024-05-05 08:00 GMT
  • சிறப்பு புலனாய்வு குழு போலீசாருடன் ஆலோசனை.
  • பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக `புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்க பரிந்துரை.

பாலியல் புகாரில் சிக்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. விசாரணைக்கு ஆஜராக கூறி ஏற்கனவே ஒருமுறை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

ஆனால் ஜெர்மனியில் இருப்பதால் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று சமூக வலைதள பதிவு மூலம் தகவல் தெரிவித்த பிரஜ்வல் ரேவண்ணா, அவரது வக்கீல் மூலம் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக 7 நாட்கள் கால அவகாசம் கேட்டார். அதை ஏற்காத சிறப்பு புலனாய்வு குழு போலீசார், தேடப்படும் நபராக பிரஜ்வல் ரேவண்ணாவை அறிவித்து லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கினர்.

இவ்வழக்கில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா, சிறப்பு புலனாய்வு குழு போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சி.பி.ஐ. 'புளூ கார்னர்' நோட்டீஸ் வழங்கினால் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருக்கிறார் மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 'புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்க மத்திய உளவுத்துறை (இன்டர்போல்) உடன் நேரடி தொடர்பில் உள்ள சி.பி.ஐ.யிடம் கர்நாடக அரசு மூலம் பரிந்துரைத்துள்ளனர். இதன் மூலம் பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டில் வைத்து கைது செய்து அழைத்து வர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டனர்.

இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா துபாயில் இருந்து இன்று பிற்பகல் பெங்களூரில் உள்ள தேவனஹள்ளி விமான நிலையத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு படையினர் பெங்களூர் தேவனஹள்ளி விமான நிலையத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு வைத்து அவரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News