உடற்பயிற்சி

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் `ஒலி குளியல்'

Published On 2024-01-05 08:53 GMT   |   Update On 2024-01-05 08:53 GMT
  • இனிமையான ஒலி அலைகள் வழியாக உடலையும், மனதையும் அமைதிபடுத்துவது.
  • குளியலுக்கான எந்த முறையும் இதில் பின்பற்றப்படுவது இல்லை.

உடலையும், மனதையும் சமநிலைப்படுத்தி இலக்குகளை நோக்கி புத்துணர்ச்சியோடு நடைபோடுவதற்கு யோகா, தியானம் போன்றவை உதவுகின்றன. அந்த வரிசையில் தற்போது பலரையும் ஈர்த்து வருவது 'சவுண்டு பாத்' எனப்படும் 'ஒலி குளியல்'. மாறுபட்ட அதிர்வெண்கள் கொண்ட, இனிமையான ஒலி அலைகள் வழியாக உடலையும், மனதையும் அமைதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

'குளியல்' என்று அழைக்கப்பட்டாலும், குளியலுக்கான எந்த முறையும் இதில் பின்பற்றப்படுவது இல்லை. உள்ளிருந்து குணப்படுத்தக்கூடிய, ஆழமான எதிரொலிக்கும் ஒலிகளில் தன்னை மறந்து மூழ்கி இருப்பதையே 'ஒலி குளியல்' என்கிறார்கள்.

 ஒலி குளியல், தியானம் செய்வதைப் போன்ற அனுபவத்தை தரக்கூடியது. இந்த சிகிச்சையின்போது யோகா விரிப்பை தரையில் விரித்து, அதில் கண்களை மூடியபடி சவாசன நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். அப்போது ஒலி எழுப்புவதில் நிபுணத்துவம் பெற்ற நபர் ஒருவர், பல்வேறு இசைக்கருவிகள் மற்றும் கிண்ணங்கள் மூலம் மாறுபட்ட அதிர்வெண்களில் ஒலி எழுப்புவார்.

நிதானமாக கண்களை மூடி, அறையில் வெளிப்படும் அந்த ஒலிகளைக் கேட்டு ரசிக்க வேண்டும். 45 முதல் 60 நிமிடங்கள் வரை இந்த சிகிச்சை நீடிக்கும்.

 நன்மைகள்:

ஒலி குளியலின்போது உருவாகும் ஒலி அதிர்வெண்கள், மூளையின் எண்ண அலைகளை சீராக்கும். இதனால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைந்து உடலும், மனமும் புத்துணர்வு பெறும். அதிக பணிச்சுமை மற்றும் மன உளைச்சலால் உண்டாகும் தலைவலி குணமாகும்.

நாள்பட்ட வலி, தூக்கம் தொடர்பான பிரச்சினை, மன அழுத்தம், பதற்றம், ஆழ்ந்த உணர்ச்சி மற்றும் உறவு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒலி குளியல் சிறந்த தீர்வாகும். கர்ப்பிணிகள், இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், அறுவை சிகிச்சை மூலம் உடலுக்குள் உலோகம் மற்றும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு இருப்பவர்கள், ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒலி குளியலைத் தவிர்ப்பது நல்லது.

Tags:    

Similar News