உடற்பயிற்சி
null

குளிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

Published On 2024-01-08 06:55 GMT   |   Update On 2024-01-08 07:02 GMT
  • குளிர்ச்சி வயதானவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது.
  • குளிர்த்தன்மை காரணமாக ரத்த நாளங்கள் சுருங்கும்.

குளிர்காலத்தில் நிலவும் அதிக குளிர்ச்சி வயதானவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. குளிர்த்தன்மை காரணமாக ரத்த நாளங்கள் சுருங்கும். அதன் விளைவாக மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படக்கூடும். குளிர் அதிகமாக இருக்கும் வேளையில் உடலின் வெப்பநிலையை சீராக தக்கவைக்க இதயம் கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். குளிர்காலத்தில் இதயத்தின் நலனை பேணுவதற்கு ஒருசில விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது.

 உடற்பயிற்சி:

உடல் எடை அதிகரிக்கும்போது இதயம், நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளிட்டவை அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. அதனால் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் திறன் குறையக்கூடும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் நலனை சீராக பராமரிக்கலாம். அதேவேளையில் கடினமான உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்க வேண்டும். அவை இதய செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்திவிடக் கூடாது. ஏனெனில் குளிர்காலத்தில் கடினமான உடற்பயிற்சிகளை செய்யும்போது இதயத்திற்கு ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும். அதனை பூர்த்தி செய்ய முடியாத பட்சத்தில் இதயம் பாதிப்புக்குள்ளாகிவிடும். மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடக்கூடும்.

மன ஆரோக்கியம்:

குளிர்காலத்தில் இரவு நீண்டும், பகல் பொழுது குறைந்தும் விடுவதால் உடல் இயக்கம் அதிகரிக்கும். அதனால் சோர்வாக உணரலாம். சூரிய ஒளி போதுமான அளவு கிடைக்காதபட்சத்தில் வைட்டமின் டி குறைபாடும் ஏற்படும். அதனால் மனச்சோர்வும் உண்டாகும். அத்தகைய பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்படி வைட்டமின் மாத்திரைகள் உட்கொள்ளலாம்.

 உணவு பழக்கம்:

குளிர்காலத்தில் நொறுக்குத்தீனிகள், எண்ணெய் பலகாரங்களை சாப்பிடுவதற்கு ஆர்வம் அதிகரிக்கும். அவை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்காது. ஊட்டச்சத்துமிக்க உணவுகளையே அவசியம் சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம்:

குளிர்ச்சியான காலநிலையின்போது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக சென்றடைய இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அத்துடன் உடல் முழுவதும் ஆக்சிஜனை செலுத்துவதற்கும் இதயம் இரண்டு மடங்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதில் தொய்வு ஏற்படும்போது இதய தசைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் நேரும். இதன் காரணமாக ரத்த உறைவு, பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

 வெந்நீர், சூப் பருகுவது நல்லது. கீரை வகைகள், பருவகால பழங்கள், முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளடக்கியசமச்சீர் உணவை உண்ணுங்கள். மது, புகைப்பழக்கத்தை அறவே தவிருங்கள். கார்பனேற்றப்பட்ட பானங்கள் பருகுவதையும் தவிர்த்துவிடுங்கள்.

Tags:    

Similar News