உடற்பயிற்சி

உடல் பருமனை குறைக்கும், உணவு கண்ணோட்டம்

Published On 2024-02-19 06:43 GMT   |   Update On 2024-02-19 06:43 GMT
  • இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
  • உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள்.

இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் பல ஆயிரங்களை செலவு செய்கின்றனர். குறிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்காக டயட், ரன்னிங், நடைப்பயிற்சி, ஜிம், விளையாட்டு, யோகா என ஏராளமான வழிமுறைகளை மாதக்கணக்கில் கடைப்பிடிக்கிறார்கள். இதற்காக தினமும் சில மணி நேரங்களை ஒதுக்குகிறார்கள்.

அத்துடன் எடை குறைப்பிற்காகவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காகவும் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகிறார்கள். ஆனாலும் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு சரியான ரிசல்ட் கிடைப்பதில்லை.

இந்தநிலையில், ``உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள். உங்களால் மன நிறைவாக சாப்பிட முடியும். அதேநேரத்தில் உங்களின் எடையும் குறையும்...'' என்று அடித்துச் சொல்கிறது இங்கிலாந்தில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு. இந்த ஆய்வை மேற்கொண்ட `அய்ன் ட்ரீ' மருத்துவமனை, 500 பேரிடம் உணவு குறித்த சர்வேயை எடுத்திருக்கிறது. இந்த ஆய்வை ராபர்ட் என்ற மருத்துவர் தலைமையேற்று, நடத்தி முடித்திருக்கிறார்.

``உணவை எப்படி வேறு விதமாக பார்ப்பது?'' என்ற கேள்விக்கு ராபர்ட் பதில் அளிக்கிறார்.

``உணவுக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நவீன வாழ்க்கையின் பரபரப்பில் அவசர அவசரமாக ஒரு கடமையை நிறைவேற்றுவதை போல சாப்பிடுகிறோம். சாப்பிடும் நேரத்தில் கூட மனதை எங்கேயோ அலையவிட்டு பதற்றத்துடன் இருக்கிறோம். அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே உணவை உள்ளே தள்ளுகிறோம். நமக்கு பசிக்கவில்லை அல்லது உணவு பிடிக்கவில்லை என்றாலும் கூட நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாகவே ஆகிவிட்டது.

முக்கியமாக சுவையானதை தேடித்தேடி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு ஆரோக்கியமானதா என்று கூட பார்ப்பதில்லை. முதலில் இந்த பழக்கத்தை மாற்றுங்கள். தியானத்தில் ஈடுபடுவதை போல முழு மனதையும் செலுத்தி உணவை உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவை தேடிப்பிடித்து சாப்பிடுங்கள். முக்கியமாக, பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள், உங்களின் எடை குறைவது மட்டுமல்லாமல் உணவைப் பார்க்கும் விதமே மாறி இருக்கும்'' என்றார்.

Tags:    

Similar News