வழிபாடு

லட்சுமி தேவி, நரசிம்மரின் மடியில் அமர்ந்திருப்பது ஏன் ?

Published On 2024-05-22 05:00 GMT   |   Update On 2024-05-22 05:00 GMT
  • அவதாரங்களில் அற்புதமானது, அழகானதும் நரசிம்மர் அவதாரம் தான்.
  • பக்தர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அடுத்த கணமே காப்பாற்ற வருபவர்.

நரசிம்மர் என்றாலே உக்கிர வடிவம், நினைத்ததும் பயம் கொள்ள வைக்கும் தோற்றம் தான் நினைவிற்கு வரும். ஆனால் நரசிம்ம ரூபங்களில் அனைவரையும் பார்த்த மாத்திரத்தில் மகிழ்ச்சி கொள்ள செய்யும் தோற்றமான லட்சுமி நரசிம்ம ரூபத்தில் மட்டும், லட்சுமி தேவி, நரசிம்மரின் அருகில் கூட இல்லாமல் மடியில் அமர்ந்த நிலையில் மட்டுமே காட்சி தருவார். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உள்ளது.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் அற்புதமானது மட்டுமல்ல அழகானதும் நரசிம்மர் அவதாரம் தான் என சொல்வார்கள். மற்ற பெருமாள் ரூபங்களில் இல்லாத மற்றொரு தனிச்சிறப்பு நரசிம்மருக்கு உண்டு. நரசிம்ம ரூபம் உக்கிரமானது என்றாலும், பக்தர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அடுத்த கணமே காப்பாற்ற வருபவர்.

நாளை என்ற சொல்லே அறியாத நரசிம்மர் என்பார்கள். தாயின் கருவில் உதித்து வந்தால் கூட தாமதமாகி விடும். தனது பக்தன் அதுவரை துன்பத்தை பொறுக்க வேண்டி இருக்குமே என நினைத்து, "தூணிலும் இருக்கிறாரா உனது ஸ்ரீஹரி?" என கேட்டு, அதை உடைக்க இரண்யன் தனது கதையை ஓங்கும் முன்பாக, அவன் வேண்டிய வரத்தின் படியே ஒரு அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிபட்டு வந்து, தனது பக்தன் பிரகலாதனை காத்தவர் நரசிம்ம மூர்த்தி.

அதே போல் தனது தந்தைக்கு சொர்க்கத்தில் இடம் தர வேண்டும் என கேட்ட பிரகலாதனுக்கு, உன்னை போன்ற ஒரு அற்புதமான தெய்வ பக்தி உள்ள குழந்தையை அளித்ததற்காக உனது தந்தைக்கு மட்டுமல்ல உனக்கு முந்தைய தலைமுறைக்கும், உனக்கு பின்னால் வரும் தலைமுறைக்கும் சொர்க்கத்தில் இடம் அளித்து விட்டேன் என கேட்டதை விட பல மடங்கு அதிகமான வரத்தை கொடுத்து அருளியவர் நரசிம்மர்.

பொதுவாக அனைத்து பெருமாள் ரூபங்களிலும் மகாலட்சுமி, திருமாலின் திருமார்பிலேயே இடம்பிடித்திருப்பார். ஆனால் நரசிம்மர் கோலத்தில் மட்டும் மகாலட்சுமி, திருமாலின் திருமார்பில் இடம் பெறாமல் மடியில் அமர்ந்திருப்பார். பெருமாள் அவளை ஆளிங்கனம் செய்த நிலையில், லேசான புன்னகையுடன், சாந்த சொரூபமாக காட்சி தருவார். இதனாலேயே நரசிம்ம ரூபங்களில், லட்சுமி நரசிம்மரை பலரும் விரும்பி வணங்குவர்.

நரசிம்மர், இரண்யனை வதம் செய்த பிறகு உக்ரம் அடங்காமல் இருந்தார். தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரை சமாதானம் செய்ய முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் நரசிம்ம ரூபத்தை கண்டு அனைவரும் பயப்பட தொடங்கினர். இறுதியாக சிவபெருமானிடம் போய் அனைவரும் முறையிட்டனர். அவர் சர்வேஸ்வர ரூபம் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார்.

ஆனால் அனைவரும் அஞ்சும் படியான ரூபத்தில் இருந்த நரசிம்மரின் மடியில் சென்று லட்சுமி தேவி அமர்ந்தாள். உடனடியாக நரசிம்மரின் உக்ர ரூபம் மாறி, அழகிய ரூபம் வந்தது. இத்தகைய அழகுடன் விளங்குவதால் நரசிம்மருக்கு ஸ்ரீமான் என்ற திருநாமம் ஏற்பட்டது. ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள்.

நரசிம்மரின் மடியில் மட்டும் லட்சுமி அமர்ந்த நிலையில் காட்சி அளிப்பதற்கு காரணம் உண்டு. ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய திருமுகத்தை பார்த்து, ஆனந்தபட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என மகாலட்சுமிக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. திருமார்பில் இருந்தால் அவரின் முகத்தை பார்க்க முடியாது என்பதால் தான் மடியில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள் என்று சொல்கிறார்கள். 

Tags:    

Similar News