வழிபாடு

செல்வசெழிப்பை தரும் நரசிம்மர் ஜெயந்தி வழிபாடு

Published On 2024-05-22 04:39 GMT   |   Update On 2024-05-22 04:39 GMT
  • பிரச்சினைகள் கதிரவனை கண்ட பனி போல விலகிவிடும்.
  • நரசிம்ம காயத்திரி மந்திரத்தை 12 முறை சொல்லலாம்.

வைகாசி மாதம், வளர்பிறை சதுர்த்தசி, சுவாதி நட்சத்திரம் பிரதோஷ வேளையில்தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் சொல்கின்றன. பிரதோஷ வேளை என்பது சிவனுக்கு மட்டுமே உரியது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் இந்த வேளையில் சுவாமியின் அவதாரம் நிகழ்ந்ததால், அது நரசிம்மருக்கும் சிறப்பான நேரமாக கருதப்படுகிறது.

ஈசனுக்கு எப்படி சனிப்பிரதோஷம் மகிமை வாய்ந்ததோ, அதேபோல நரசிம்மருக்கும் செவ்வாய்க்கிழமை, சுவாதி நட்சத்திரத்தில் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை. இந்த நேரத்தில் நரசிம்மரை வணங்கி விரதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும், கடன்கள் தீரும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்று ஐதீகம்.

வழிபாடும் விரதமும்

மேலும் நரசிம்மரின் அவதார திருநாளான நரசிம்மஜெயந்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் பகைவர்களால் தீராத தொல்லை, பில்லி சூனியம், கடன் தொல்லை, குடும்பத்தில் சச்சரவு, பணத்தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் கதிரவனை கண்ட பனி போல விலகிவிடும்.

அதிலும் குறிப்பாக நரசிம்ம ஜெயந்தி அன்று அதிகாலை எழுந்து நீராடி நாமம் தரித்துக் கொண்டு லட்சுமி நரசிம்மர் படத்தை செவ்வரளி மலர்கள், துளசியால் அலங்கரித்து பானகம் அல்லது சர்க்கரைப்பொங்கல் படைத்துவிட்டு, நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை நரசிம்மரே குரு, நரசிம்மரே இறைவன் அவரே எனக்கு எல்லாமுமாக இருக்கிறார் அப்படிப்பட்ட லட்சுமி நரசிம்மரை நான் சரணடைகிறேன்-என்று 12 முறை சொல்லிவிட்டு சுவாமி முன்பாக விழுந்து வணங்கவேண்டும்.

பின்னர் தெரிந்தவர்கள் நரசிம்ம காயத்திரியை 12 முறை சொல்லலாம். தொடர்ந்து தீபதூபங்கள் காட்டி விட்டு சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு சாப்பிடலாம்.

மேலும் விரதம் இருப்பவர்கள் பிரசாதம் உண்ணுவதற்கு முன்பாக சுவாமியின் உருவப்படத்தின் முன்பாக வந்து, இன்ன காரியத்துக்காக தொடர்ந்து குறிப்பிட்ட மாதம் சுவாதி நட்சத்திர நாளில், எல்லா நலன்களும் அருள்வாய் லட்சுமி நரசிம்மா என்று மனமார வேண்டிக் கொள்ள வேண்டும்.

அதுவும் குறிப்பாக இந்த பூஜையை பிரதோஷ நேரத்தில்தான் செய்து வரவேண்டும். மேலும் விரதம் இருப்பவர்கள் நாள்முழுவதும் திரவ உணவு மட்டுமே உட்கொள்வது நல்லது.

சுவாமிக்கு 21 அல்லது 45 நாட்கள் விரதம் இருப்போர் அத்தனை நாட்களும் உபவாசம் இருக்கவேண்டுமென அவசியம் இல்லை. பிரதோஷ வேளையில் நரசிம்மரை 12 முறை வணங்கி எழுந்தபிறகு பானகம் நிவேதிக்கலாம். அசைவ உணவு, பழைய உணவு, கடை உணவுகள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது, அவ்வளவுதான்.

விரதம் முடியும் நாளன்று நரசிம்மர் சன்னதி இருக்கும் கோவிலுக்கு புறப்பட்டு சென்று அங்கு சுவாமிக்கு துளசி மாலை சாத்தி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பின்னர் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து இறைவனிடம் பிரார்த்தனை நிறைவேற மனமுருகி வேண்ட வேண்டும். மேலும் ஏழை-எளியோர்க்கு இயன்ற உணவும், நீரும் தானம் அளித்தல் சிறப்பு.

மேற்கூறிய முறையில் நரசிம்ம ஜெயந்தி அன்று தொடங்கி 21-45 நாட்கள் அல்லது மாதாமாதம் சுவாதி நட்சத்திர நாளில் விரதம் இருந்து வந்தால் தீராத துன்பங்கள், கடன் தொல்லை, தீவினைகள், தோஷங்கள் அனைத்தும் ஓடியே போய்விடும்.

பிரகலாதன், ஆதிசங்கரருக்காக அருள்புரிந்த நரசிம்ம பெருமாள் நமக்காகவும் நம் துன்பங்களை துடைக்கவும் அருள்புரிவார். ஆகவே நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபாடு செய்து செல்வம், ஆரோக்கியம், நீண்ட புகழ் ஆகியவற்றுடன் நீண்ட காலம் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைப்போம்.

Tags:    

Similar News