கிரிக்கெட்

ஆட்டத்தை மாற்றிய பவர்பிளே: தோல்வி குறித்து ரிஷப் பண்ட்

Published On 2024-04-21 07:42 GMT   |   Update On 2024-04-21 07:42 GMT
  • ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி டெல்லியை வீழ்த்தி 5வது வெற்றி பெற்றது.
  • இதன்மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

புதுடெல்லி:

டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 266 ரன் குவித்தது.

டிராவிஸ் ஹெட் 32 பந்தில் 89 ரன்னும் (11 பவுண்டரி, 6 சிக்சர்), ஷாபாஸ் அகமது 29 பந்தில் 59 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), அபிஷேக் சர்மா 12 பந்தில் 46 ரன்னும் (2 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், முகேஷ்குமார், அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஐதராபாத் அணியின் தொடக்க வீரரான டிரெவிஸ் ஹெட்-அபிஷேக் சர்மா ஜோடி பவர் பிளேயில் 125 ரன் விளாசி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.1 ஓவரில் 199 ரன்னில் சுருண்டது. இதனால் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரேசர் 18 பந்தில் 65 ரன்னும் (5 பவுண்டரி, 7 சிக்சர்), கேப்டன் ரிஷப் பண்ட் 35 பந்தில் 44 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) அபிஷேக் போரல் 22 பந்தில் 42 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

தமிழக வீரர் டி.நடராஜன் 4 விக்கெட்டும். மார்கண்டே, நிதிஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும் வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஐதராபாத் அணி 5-வது வெற்றியை பதிவுசெய்தது. இதன்மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளது.

டெல்லி அணி 5-வது தோல்வியை தழுவியது.

இந்நிலையில், தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், முதலில் நாங்கள் பந்து வீசும்போது பனி இருக்கும் என நினைத்தோம். ஆனால் பனித்துளி ஏற்படவில்லை. ஐதராபாத்தை 220 முதல் 230 ரன்களுக்கு கட்டுப்படுத்தினால் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். முதல் 6 ஓவர், அதாவது பவர்பிளே தான் 2 அணிகளுக்கும் உள்ள வித்தியாசம். இதுதான் ஆட்டத்தை மாற்றிவிட்டது. நாங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவோம். ஜேக் பிரேசர் பேட்டிங் அற்புதமாக இருந்தது. அடுத்த ஆட்டத்தில் எங்களை மேம்படுத்திக் கொள்வோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News