search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனாமா கேட் ஊழல் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் நவாஸ் ஷெரிப்
    X

    பனாமா கேட் ஊழல் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் நவாஸ் ஷெரிப்

    பனாமா கேட் ஊழல் வழக்கு விசாரணைக்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதையடுத்து,  உச்ச நீதிமன்றத்தால் எதகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார். அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டது. 

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிப் அந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார்.  இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 12-ம் தேதி நீதிபதி எஜாஸ் அப்சல் தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வுதான் விசாரிக்க வேண்டும் என நவாஸ் ஷெரிப், அவரது மகள், மகன்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கை 5 நீதிபதிகளை கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றுமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    இதையடுத்து, நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நவாஸ் ஷரிப் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் மீதான விசாரணை தொடங்கியது. இருப்பினும் தனது மனைவியின் உடல்நிலை சரியில்லாததால் லண்டன் சென்ற அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். 

    எனவே கடந்த 26-ம் தேதி அவர் மீது ஜாமினில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து வேறு வழியின்றி வழக்கு விசாரணைக்காக நேற்று பாகிஸ்தான் திரும்பினார். நாடு திரும்புவதற்கு முன்னர் லண்டன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் ஷெரிப், “உடல்நலம் சரியில்லாத மனைவியுடன் இருக்கமுடியாமல் போலி வழக்குகளை சந்திக்க பாகிஸ்தான் செல்கிறேன்”, என கூறியிருந்தார்.

    இந்நிலையில், ஊழல் வழக்கு விசாரணைக்காக நவாஸ் ஷெரிப் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் அவரது மகள் மரியமும் வந்தார். இந்த வழக்கு விசாரணையில் குற்றவாளி என மீண்டும் தீர்ப்பளிக்கப்பட்டால் நவாஸ் சிறையில் அடைக்கப்படுவார் என கூறப்படுகிறது.

    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் வரி ஏய்ப்பு செய்து சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது பனாமா ஆவணங்கள் மூலம் அம்பலமானது. இதில், நவாஸ் ஷெரீப் மற்றும் குடும்பத்தினரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×