search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கென்யாவில் மறுதேர்தலுக்கு பிறகு நீடிக்கும் கலவரம்: போலீஸ் துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழப்பு
    X

    கென்யாவில் மறுதேர்தலுக்கு பிறகு நீடிக்கும் கலவரம்: போலீஸ் துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழப்பு

    கென்யாவில் அதிபர் பதவிக்கான மறுதேர்தல் நடைபெற்ற பிறகு கலவரம் நீடித்து வரும் நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
    நைரோபி:

    ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் ஊகுரு கென்யட்டாவின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி அதிபர் தேர்தல் நடந்தது. தேர்தலில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் ரைலா ஓடிங்கா போட்டியிட்டார். ஆனால், இந்த தேர்தலில் மறுபடியும் ஊகுரு கென்யட்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால், தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் சார்பில் புகார் கூறப்பட்டது. முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதனால் தேர்தலை ரத்து செய்து தேர்தல் துறை உத்தரவிட்டது.

    பின்னர் நேற்று முன்தினம் (26-ம் தேதி) மறுதேர்தல் நடந்தது.  ஆனால், தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாலும், வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படாத நிலையில் தேர்தலை நடத்தியதாலும், எதிர்க்கட்சி இந்த தேர்தலை புறக்கணித்தது. அத்துடன் தேர்தல் நடந்ததை எதிர்த்து பல இடங்களிலும் எதிர்க்கட்சியினர் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது. மோதல் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்த போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏற்கனவே 6 பேர் பலியான நிலையில், நேற்று மாலை மேலும் ஒரு போராட்டக்காரர் உயிரிழந்தார். நைரோபியின் கவாங்வேர் குடிசைப் பகுதியில் மூன்று பழங்குடியின குழுக்களிடையே நடந்த மோதலின்போது போலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் பலியானதாக தெரியவந்துள்ளது.  இதேபோல் நேற்று காலையில் பங்கோமா நகரில் ஒரு போராட்டக்காரர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழப்பு 8 ஆக உயர்ந்துள்ளது.



    கலவரப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த தேர்தலில் அதிபர் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவித்தபோதும் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டு 70 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×