search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணிக்கவாசகர் இளஞ்செழியன்
    X
    மாணிக்கவாசகர் இளஞ்செழியன்

    யாழ்ப்பாணம் நீதிபதியை கொல்ல முயற்சி: போலீசாரால் தேடப்பட்ட நபர் சரண் அடைந்தார்

    இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியை கொல்ல முயன்ற வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் விடுதலைப் புலி இயக்கத்தை சேர்ந்தவர் இன்று போலீசில் சரண் அடைந்தார்.
    கொழும்பு:

    இலங்கை புங்குடுதீவு பகுதியில் மாணவி வித்தியா கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாணம் நகர மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் என்பவர் விசாரித்து வருகிறார். மிகவும் கறார் நீதிபதி என்று அறியப்பட்டும் இவர் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு குற்றவியல் வழக்குகளையும் விசாரணை செய்துள்ளார்.

    வழக்கில் சிக்கிய போலீஸ் டி.ஐ.ஜி,. ஒருவரை கைது செய்து சிறையில் அடைக்க மாணிக்கவாசகம் இளஞ்செழியன் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் சந்திப்பு வழியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடந்த வெள்ளிக்கிழமை காரில் சென்றபோது கார் சிக்னலுக்காக காத்திருந்தது. அப்போது காரின் அருகாமையில் வந்த ஒரு மர்ம நபர் நீதிபதியின் மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள போலீஸ்காரரின் துப்பாக்கியை திடீரென்று உருவி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை நோக்கி சரமாரியாக சுட்டார்.

    அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க நடைபெற்ற போராட்டத்தில் குண்டு காயம் அடைந்த போலீஸ்காரர் சரத் பிரேமசந்திரா என்பவர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    தன்மீது ஏவப்பட்ட கொலைவெறி தாக்குதலில் இருந்து நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாணிக்கவாசகர் இளஞ்செழியனை கொல்ல முயன்ற சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், வடக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறை அலுவலர்களும், தனியார் பேருந்து உரிமையளர்கள் சங்கமும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியை கொல்ல நடைபெற்ற முயற்சியையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் இதர நீதிபதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் போலீஸ் ஐ.ஜி. பூஜித் ஜெயசுந்தராவுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

    நீதிபதியின் உயிரை காப்பாற்றும் போராட்டத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் சரத் பிரேமசந்திராவின் மரணத்துக்கும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய குற்றவாளிகளில் மேலும் ஒருவரை தேடி வருவதாகவும் போலீசார் நேற்று தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்ட செல்வராஜா ஜெயந்தன் என்பவர் இன்று போலீசில் சரண் அடைந்தார். 1996-98 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் செல்வராஜா ஜெயந்தன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயலாற்றி வந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.


    Next Story
    ×