search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடரும் மாணவர்கள் சாவு: தலைநகருக்கு தலைகுனிவு- தலையங்கம்
    X

    தொடரும் மாணவர்கள் சாவு: தலைநகருக்கு தலைகுனிவு- தலையங்கம்

    டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் படித்து மர்மமான முறையில் இறந்த தமிழக மாணவர் சரவணன் மரணத்தின் மீதான சந்தேகம் தெளிவதற்குள் திருப்பூர் மாணவர் சரத்பிரபுவும் சந்தேகத்துக்கு இடமான வகையில் பலியாகி இருக்கிறார்.
    சென்னை:

    சந்தேக கோடு சந்தோசகேடு என்பார்கள். டெல்லியில் தொடரும் தமிழக மாணவர்களின் மர்ம மரணங்களும் அதை சுற்றி விழும் சந்தேக கோடுகளும் ஏதோ ஓரிரு மாணவர்கள் குடும்பத்துக்கு மட்டும் ஏற்பட்ட சந்தோசக்கேடு அல்ல. நாடு முழுவதும் சந்தோசத்துக்கு கேடு விளைவிக்கும் சம்பவமாகத்தான் பார்க்கப்படுகிறது.

    டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் படித்து மர்மமான முறையில் இறந்த தமிழக மாணவர் சரவணன் மரணத்தின் மீதான சந்தேகம் தெளிவதற்குள் திருப்பூர் மாணவர் சரத்பிரபுவும் சந்தேகத்துக்கு இடமான வகையில் பலியாகி இருக்கிறார்.

    அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்த மரணங்கள் நிகழ்ந்தது எப்படி? ஏன்? எதற்காக என்ற பல்வேறு சந்தேக கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. தொடரும் மரணங்களும், தொடர்ந்து வரும் சந்தேகங்களும் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் தீர்க்கப்பட்டாக வேண்டும்.

    இந்த இழப்பு என்பது தனிப்பட்ட சரவணன் குடும்பத்துக்கும், சரத்பாபு குடும்பத்துக்கும் ஏற்பட்ட இழப்பு அல்ல. இந்த தேசம் இரு தலைசிறந்த மருத்துவர்களை இழந்து இருக்கிறது.

    சரவணனும் சரி, சரத்பிரபுவும் சரி சராசரி மாணவர்கள் அல்ல. இளங்கலை மருத்துவ படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள். மிகச்சிறந்த படிப்பாளிகள். அதனால்தான் டெல்லியில் மேல் படிப்பு படிக்க இடமும் கிடைத்து படிப்பை தொடர்ந்தவர்கள்.

    நாட்டின் எந்த மூலையிலும் மருத்துவத்துக்கு படிக்க துடிக்கும் மாணவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது ஆசை! கனவு!

    அந்த வகையில் இவர்களுக்கும் எவ்வளவோ கனவுகள், லட்சியங்கள் இருந்திருக்கும். அத்தனையும் கானல் நீராகிவிட்டது. முதுகலை டாக்டர் படிப்பு படிப்பவர்கள் ஏதோ ஒரு உப்புசப்பில்லாத சிறு சிறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழைகளாக இருக்கமாட்டார்கள்.

    கலை-அறிவியல் கல்லூரிகளில் கூட இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும்போது மட்டும்தான் கொஞ்சம் அதிகமாகவே முதுகலை பட்டப்படிப்பில் நுழைந்ததும் அடங்கிப் போகிறார்கள். அவர்களின் கவனம் முழுவதும் படிப்பின் மீதுதான் இருக்கும். இதுதான் அனுபவ முதிர்ச்சி. இது உளவியல் ரீதியான உண்மை. இந்த நிலையில் டாக்டருக்கு படிப்பவர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

    மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி படிப்புகளை விரும்பும் மாணவர்கள் தலைசிறந்த கல்லூரிகளில் படித்து தலைசிறந்த நிபுணர்களாக வர வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அதற்காகத்தான் அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளையும் ஆர்வத்துடன் சந்திக்கிறார்கள்.

    ஒவ்வொரு துறையிலும் திறமைசாலிகள் உருவாக வேண்டும். அவர்கள் நாட்டின் எந்த மூலையிலும் விரும்பிய கல்லூரிகளை தேர்வுசெய்து படித்து கொள்ளலாம் என்பதற்காகத்தான் கல்வித்துறை பல மாற்றங்களைகொண்டு வருகிறது. அதில் ஒன்றாகத்தான் ‘நீட்’ தேர்வும் பார்க்கப்படுகிறது.

    இப்படி வடிகட்டப்பட்டு தேர்வாகும் மாணவர்கள் அனைவரும் படிப்பில் புலியாகத்தான் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் வேறு எந்த உணர்வுகளும் வராது என்பது நம்பிக்கை.

    ஆனால் தற்போது நடைபெறும் சம்பவங்களை பார்க்கும்போது படிப்பையும் தாண்டி ஏதோ நடக்கிறது என்பது மட்டும் புரிகிறது. ஆனால் அது என்ன என்பது சக மாணவர்களுக்கு மட்டுமே தெரிந்த சிதம்பர ரகசியம்.

    சரத்பிரபு குளியலறையில் பிணமாக கிடந்து இருக்கிறார். பொட்டாசியம் குளோரைடு மருந்து மற்றும் ஊசியும் அருகில் கிடந்து இருக்கிறது. பொட்டாசியம் குளோரைடு ஊசி மூலம் உடலில் செலுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தன. அவரை வி‌ஷஊசி போட்டு கொலை செய்துவிட்டார்கள் என்று தந்தை குற்றம் சாட்டி இருக்கிறார்.

    சரவணன் இறந்தபோதும் இதேபோன்ற தடயங்கள் தான் காணக்கிடைத்தது. கல்லூரி நிர்வாகமும், மாணவர்களும் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற புகாரும் இருக்கிறது. உண்மை தெரிந்தவர்கள் அவர்கள்தான். அவர்களே ஒதுங்குவது ஏன்?

    போலீசின் கூற்றுபடியே தற்கொலையாகவே வைத்துக் கொள்வோம். இரண்டு மாணவர்களின் சாவும் ஒன்றுபோல் இருக்கிறது. ஒரே தடயங்கள்! சந்தேகம் வராதா?

    இந்த சந்தேகங்களை எல்லாம் விட்டு விடுவோம். அவர்கள் தற்கொலைதான் செய்தார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

    அதற்கு ஒரு காரணம் வேண்டும் அல்லவா? சாவுக்கான காரணம் தெரிந்தாக வேண்டும். இது உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக மட்டும் அல்ல. காரணம் தெரிந்தால்தான் இனியும் இதேபோன்ற மரணங்கள் நிகழ்வதை தடுக்க முடியும்.

    இல்லாவிட்டால் வியாதிபோல் உள்ளேயே பரவி பல மாணவர்களின் உயிரை குடித்துவிடும்.

    இருவரது மரணத்துக்கும் நியாயம் வேண்டும். நியாயமான காரணம் தெரிய வேண்டும். உண்மை உறங்கும்போது பொய் ஊர்வலம் வரும் என்பார்கள். அதேபோல் இந்த விவகாரத்தில் மறப்பதும், மறைப்பதும் மிகப்பெரிய ஆபத்துக்கு வழிவகுத்துவிடும்.

    ஒரு பிரச்சனையை மூடி மறைப்பதாக நினைத்தால் பல பிரச்சனைகள் பல வடிவங்களில் உருவெடுத்துவிடும் என்ற எச்சரிக்கை உணர்வு அவசியம்.

    ஒரு மரணம் தான் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும். இந்த இரு மரணங்களும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைய வேண்டும்.

    டெல்லி சென்று படிப்பது ஆபத்தான வி‌ஷயம் என்ற எண்ணம் பிறமாநில மாணவர்கள் மத்தியில் வளர அனுமதிக்க கூடாது. #tamilnews
    Next Story
    ×