search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர்-சிவகங்கை-ராமநாதபுரத்தில் இரவில் பஸ்களை இயக்காததால் பொதுமக்கள் கடும் அவதி
    X

    விருதுநகர்-சிவகங்கை-ராமநாதபுரத்தில் இரவில் பஸ்களை இயக்காததால் பொதுமக்கள் கடும் அவதி

    அரசு பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 8-வது நாளாக இன்றும் தொடருவதால் பொது மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த ஒரு வாரமாக குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்காலிக பணியாளர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தற்போது மாவட்டத்தில் 75 சதவீத பஸ்கள் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோக்களும் அதிகளவில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமங்கள் ஓரளவு குறைந்து உள்ளன. ஆனாலும் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளன.

    வேலை நிறுத்தம் காரணமாக மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. இன்றும் அதே நிலை தொடருகிறது.

    சிவகங்கை மாவட்டத்திலும் இன்று 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, தேவகோட்டை, காளையார் கோவில் போன்ற முக்கிய ஊர்களுக்கு தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இதேபோல் ஷேர் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்களிலும் கிராம மக்கள் பயணம் செய்தததை காணமுடிந்தது.

    சிவகங்கையில் இருந்து மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இதனால் வேலைக்கு செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அரசு பஸ்கள் 80 சதவீதம் இயக்கப்படுகிறது. அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக பணியாளர்கள் கூடுதலாக பணி அமர்த்தப்பட்டு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    மாவட்டத்தில் முக்கிய பகுதிகளுக்கு தற்போது பஸ் போக்குவரத்து உள்ளன. ஆனால் கிராமப்புற பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இன்றும் அதே நிலை தான் நீடித்தது.

    3 மாவட்டங்களிலும் பகல் நேரங்களில் ஓரளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டாலும், இரவு 8 மணிக்குள் அரசு பஸ்கள் பெரும்பாலும் பணி மனைக்குள் சென்று விடுகின்றன. இதனால் பணி முடிந்து வரும் ஊழியர்கள் பஸ் கிடைக்காமல் பல மணிநேரம் காத்திருந்து வீடுகளுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது. மேலும் பல பகுதிகளில் அரசு பஸ்கள் இல்லாததால் ரூ. 200 வரை கொடுத்து ஆட்டோக்களில் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. #tamilnews

    Next Story
    ×