search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலை இன்ஸ்பெக்டருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை: தாராபுரம் கோர்ட் தீர்ப்பு
    X

    உடுமலை இன்ஸ்பெக்டருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை: தாராபுரம் கோர்ட் தீர்ப்பு

    நில விவகாரத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக உடுமலை இன்ஸ்பெக்டருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தாராபுரம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஊத்துப்பாளையத்தை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 68). விவசாயி.

    இவருக்கு ஊத்துப்பாளையத்தில் விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்துக்கு அருகில் சிக்கனாபுரத்தை சேர்ந்த சின்னசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலமும் உள்ளது.

    இந்தநிலையில் தங்க முத்து, சின்னசாமி ஆகியோருக்கு இடையே நிலம் சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலம் சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சின்னசாமி மற்றும் காங்கேயம் அருகே உள்ள சுக்குட்டிபாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன், சிக்கனாபுரத்தை சேர்ந்த சிவராஜ், ரஞ்சிதாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ், தண்ணீர் பந்தலை சேர்ந்த ஈஸ்வரன், அப்போதைய தாராபுரம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், கிராம நிர்வாக அதிகாரி ஜெயபிரகாஷ், நில அளவையாளர் பன்னீர் செல்வம், உதவியாளர் சங்கரன், தங்க முத்துவின் விவசாய நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் நிலத்தை அளந்து வேலி போட்டனர்.

    இதனை தடுக்க சென்ற விவசாயி தங்க முத்து மற்றும் அவரது குடும்பத்தினரை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தரக்குறைவாக பேசி தாக்கியதாக தாராபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தங்கமுத்து வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சசிகுமார் இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக 1 ஆண்டு சிறை தண்டனையும், குற்றம் சாட்டப்பட்ட சின்னசாமி இறந்துவிட்டார். எனவே மீதமுள்ள 10 பேரில் 9 பேரை எச்சரிக்கையுடன் விடுவித்தும் தீர்ப்பளித்தார்.

    சிறைதண்டனை விதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தற்போது உடுமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
    Next Story
    ×