search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து 6 மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்: நீதிபதி ராஜேஸ்வரன் தகவல்
    X

    ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து 6 மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்: நீதிபதி ராஜேஸ்வரன் தகவல்

    ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த விசாரணை அறிக்கை 6 மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நீதிபதி ராஜேஸ்வரன் கூறினார்.
    மதுரை:

    ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. கடந்த 23.1.2017 அன்று நடந்த போராட்டத்தின்போது சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டது. அதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது.

    இந்த கமிஷனிடம் போராட்ட நிகழ்வுகள் குறித்து அறிந்தவர்கள், பொதுமக்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். பிரமாண பத்திரம் தாக்கல் செய்த சென்னை, கோவை பகுதியை சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே நேரில் விசாரணை நடந்துள்ளது.

    அதேபோல் மதுரை தமுக்கம் மைதானம், அலங்காநல்லூர், பெரியார் பஸ் நிலையம், பாலம் ஸ்டேஷன் ரோடு மற்றும் சில பகுதிகளில் நடந்த போராட்டங்கள் குறித்தும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தனர். அவ்வாறு தாக்கல் செய்த மதுரை பகுதியை சேர்ந்தவர்கள் விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டு இருந்தது.

    அதன்படி, மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நேற்று விசாரணை தொடங்கியது. 5 பேர் விசாரணைக்கு வந்து இருந்தார்கள்.

    இதுகுறித்து நீதிபதி ராஜேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்த சம்பவங்கள் பற்றி தமிழகம் முழுவதும் இருந்து 1,951 புகார் மனுக்கள் வந்து இருந்தன. மதுரையில் இருந்து 25 புகார் மனுக்கள் வந்தன. அவர்களில் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 6-ந் தேதி (நாளை) வரை விசாரணை நடக்கிறது.

    மீண்டும் விசாரணைக்காக மதுரைக்கு வருவேன். புகார்கள் அளிப்பதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. இனி புதிதாக யாரும் புகார்கொடுக்க இயலாது. இந்த விசாரணை 6 மாதகாலத்தில் முடிவடையும். அதன் பின் விசாரணை அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×