search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவாஜி கணேசன் சிலையை மெரினாவிலேயே நிறுவ வேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
    X

    சிவாஜி கணேசன் சிலையை மெரினாவிலேயே நிறுவ வேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

    சிவாஜிகணேசன் சிலையை மெரினாவிலேயே நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    சென்னை:

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 16-வது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியின் போது முறைப்படி அனுமதி பெற்று கடற்கரை சாலையில் சிவாஜி கணேசன் சிலை அமைக்கப்பட்டது. இப்போது கோர்ட்டு உத்தரவுப்படி வேறு இடத்துக்கு மாற்றப்பட இருக்கிறது.

    மெரினா கடற்கரையில் காந்தி, காமராஜர் மற்றும் பல்வேறு தலைவர்கள், புலவர்கள் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரையில் அமைத்துள்ள காமராஜர் சிலை அருகில் சிவாஜி சிலையையும் அமைக்க வேண்டும்.

    கோர்ட்டு அங்கிருந்து அகற்றமட்டும்தான் சொல்லி இருந்தது. மணி மண்டபத்தில் வைக்கும் படியோ, மெரினா கடற்கரையில் வைக்க கூடாது என்றோ சொல்லவில்லை. எனவே மெரினாவிலேயே சிவாஜி சிலையை நிறுவ வேண்டும்.

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கமல் அதுபற்றி கருத்து கூறினால், நடவடிக்கை எடுப்பது பற்றி அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.

    அதைவிட்டு விட்டு அவரை விமர்சிப்பது சரியல்ல. ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு.

    அ.தி.மு.க. மீது கமல் கூறும் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா பாய்வது ஏன்? கமல் புத்திசாலி, அனுபவசாலி, மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார். கமலை திரைப்படங்களில் இயக்கலாம். ஆனால் அரசியலில் அவரை யாரும் இயக்க முடியாது.

    தமிழ்நாட்டில் பா.ஜனதாவுக்கு உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. பா.ஜனதாவை மக்கள் ஆதரிக்கவில்லை. எனவே ஒவ்வொருவருக்கும் 2 சென்ட் நிலம் இலவசமாக கொடுப்போம். வீடுகட்டி கொடுப்போம் என்று பொய் பிரசாரம் செய்து உறுப்பினர்களை சேர்க்கிறார்கள்.

    இந்த மோசடி பொய் பிரசாரத்தை பா.ஜனதாவினர் உடனே நிறுத்த வேண்டும். பா.ஜனதாவினர் பொய் பிரசாரம் செய்து தமிழக மக்களை ஏமாற்ற நினைத்தால் ஏமாந்து போவார்கள்.

    நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வருகிற 27-ந் தேதி தி.மு.க. மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறது. இதில் காங்கிரசும் பங்கேற்கும்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இதுபோல் பல்வேறு அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் தமிழக அரசு செயல் இழந்து வருகிறது.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், டி.யசோதா, மாவட்ட தலைவர்கள் சிவராஜ் சேகர், வீரபாண்டியன், கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×