search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் தீ வைத்ததில் பிராந்தி கடை பார் கொட்டகை எரியும் காட்சி.
    X
    பொதுமக்கள் தீ வைத்ததில் பிராந்தி கடை பார் கொட்டகை எரியும் காட்சி.

    பாகூர் அருகே 12 மதுக்கடைகள் சூறை - தீவைப்பு

    பாகூர் அருகே மூடப்பட்டு இருந்த மதுக்கடைளை அடித்து நொறுக்கி, கொட்டகைகளுக்கு தீ வைத்த பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது.
    பாகூர்:

    புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ளது சோரியாங்குப்பம் கிராமம். கடலூர் நகரை ஒட்டி இந்த கிராமம் அமைந்துள்ளது.

    கடலூர் சாவடியில் இருந்து சோரியாங்குப்பம் வருவதற்கு பெண்ணை ஆற்றில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    சோரியாங்குப்பத்தில் 10 பிராந்தி கடைகள், 2 சாராய கடைகள் உள்ளன. கடலூர் மாவட்ட மக்கள் பெருமளவில் இங்கு வந்து மது குடிப்பது வழக்கம்.

    இந்த மதுக்கடைகளுக்கு வருபவர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. எனவே இந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் ஏற்கனவே வற்புறுத்தி வந்தனர்.

    இதற்காக கடை அடைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தினார்கள். ஆனால், சோரியாங்குப்பத்தில் மேலும் புதிதாக 15 மதுக்கடைகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    இதற்கு சோரியாங்குப்பம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிதாக மதுக்கடைகளை திறக்க அனுமதி அளிக்க கூடாது. ஏற்கனவே உள்ள மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி வந்தனர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இதற்காக இன்று காலை ஏராளமான பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் போராட்டத்தால் சோரியாங்குப்பத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால், ஒரே ஒரு சாராய கடை மட்டும் திறந்து இருந்தது.

    இது, போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    அவர்கள் அந்த சாராய கடைக்கு திரண்டு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். திடீரென அவர்கள் அங்கிருந்த சாராய பாட்டில்கள் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். சாராய கடை சூறையாடப்பட்டது.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.

    எனவே, மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். தடியடி நடத்தியதில் பொதுமக்கள் பலர் காயம் அடைந்தனர்.

    தடியடி நடத்தினாலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. பொதுமக்கள் மேலும் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஜீப்பை சிறை பிடித்தனர். மேலும் அவர்கள் அந்த பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் அவர்கள் திடீரென எழுந்து மீண்டும் மதுக்கடைகளை நோக்கி சென்றார்கள். அங்கு ஏற்கனவே மூடப்பட்டு இருந்த 11 மதுக்கடைகளை அடித்து நொறுக்கினார்கள். 2 மதுக்கடை பார் கொட்டகைகளுக்கு தீ வைத்தனர். அவை எரிந்து சாம்பலானது. எனவே, போலீசார் மீண்டும் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனால் அவர்கள் கலைந்து ஓடினார்கள். பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. புதுவையில் இருந்து அதிக அளவில் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அதிரடிப்படை போலீசாரும் அங்கு சென்றுள்ளனர்.
    Next Story
    ×