search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து
    X

    டி20 கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் கொலின் முன்ரோவின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து வெற்றி பெற்றது. #NZvPAK #ColinMuntro #TimSouthee
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையில் முடிவடைந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து 5-0 என வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. வெலிங்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பகர் சமான், உமர் அமின் ஆகியோர் களம் இறங்கினார்கள். பகர் சமான் 3 ரன்கள் எடுத்த நிலையில் சவுத்தி பந்தில் ஆட்டமிழந்தார். உமர் அமின் ரன்ஏதும் எடுக்காமல் ரேன்ஸ் பந்தில் வெளியேறினார்.



    அதன்பின் வந்த மொகமது நவாஸ் (7), ஹாரிஸ் சோஹைல் (9), சர்பிராஸ் அகமது (9), சதாப் கான் (0), பஹீம் அஷ்ரப் (7) அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். முன்னணி பேட்ஸ்மேன் ஆன பாபர் ஆசம் 41 ரன்களும், வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 23 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் 19.4 ஓவரில் 105 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் ரென்ஸ், சவுத்தி தலா 3 விக்கெட்டும், சான்ட்னெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்தின் தொடக்க வீரர்களான மார்ட்டின் கப்தில், கொலின் முன்ரோ ஆகியோர் களம் இறங்கினார்கள். மார்ட்டின் கப்தில் 2 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த பிலிப்ஸ் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து 8 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.

    3-வது விக்கெட்டுக்கு கொலின் முன்ரோ உடன் ப்ரூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ப்ரூஸ் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு கொலின் முன்ரோ உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது.



    16-வது ஓவரில் ராஸ் டெய்லர் ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க நியூசிலாந்து 15.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொலின் முன்ரோ 49 ரன்னுடனும், ராஸ் டெய்லர் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    கொலின் முன்ரோ ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி 25-ந்தேதி ஆக்லாந்தில் நடக்கிறது. #NZvPAK #ColinMuntro #TimSouthee
    Next Story
    ×