என் மலர்
செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் டோனி,ரெய்னா
சென்னை:
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது.
இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல் ஆகிய 2 அணிகள் இதில் பங்கேற்கின்றன. குஜராத் லயன்ஸ், ரைசிங்புனே ஆகிய அணிகளின் ஒப்பந்தம் முடிகிறது.
8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜனவரி 27 மற்றும் 28-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் வீரர்களுக்கு செலவின தொகை ரூ.80 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 4-ந்தேதிக்குள் தக்க வைத்துக்கொள்ளும் வீரர்கள் பட்டியலை கிரிக்கெட் வாரியத்திடம் ஒவ்வொரு அணி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ரெய்னா ஆகியோர் மீண்டும் இடம் பெறுகிறார்கள். இருவரும் 8 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர்கள்.
தடை காரணமாக டோனி கடந்த 2 ஆண்டில் புனே அணிக்கும், ரெய்னா குஜராத் அணிக்கும் ஆடினர். தற்போது இருவரும் ஒன்றாக இணைந்து மீண்டும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணியில் கலக்க இருக்கிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3-வது வீரராக அஸ்வின் அல்லது ஜடோஜா தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது. 3 வீரர்களையும் (டோனி, ரெய்னா, அஸ்வின் அல்லது ஜடோஜா) ரூ.33 கோடிக்கு தக்க வைத்துக் கொள்ளலாம் என்று தெரிகிறது. மீதி உள்ள தொகை ஏலத்தின் போது செலவிடப்படும்.






