search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - கேரளா இடையேயான போட்டி டிராவில் முடிந்தது
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - கேரளா இடையேயான போட்டி டிராவில் முடிந்தது

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் சென்னையின் எப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய 30-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணியை எதிர்கொண்டது.

    இப்போட்டி தொடங்குவதற்கு முன்னர், சென்னையின் எப்.சி. அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு தோல்வியுடன் மூன்றாவது இடத்தில் இருந்தது. கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று டிரா, ஒரு தோல்வியுடன் ஏழாவது இடத்தில் இருந்தது.



    விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இரு அணியினரின் கோல் போடும் முயற்சிகள் வீணானது. இருப்பினும் 89-வது நிமிடம் சென்னை அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட சென்னை அணியின் ரினே மிஹெலிக் கோல் அடித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 90-வது நிமிடமே கேரளா அணியின் வினீத் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.



    அதன்பின் மேற்கொண்டு கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிரா ஆனது. இதனால் இரு அணியினருக்கும் 1 புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன்மூலம் சென்னை அணி புள்ளிபட்டியலில், 13 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.

    நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் எப்.சி கோவா - எப்.சி. புனே சிட்டி, அட்லெடிகோ டி கொல்கத்தா - டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    Next Story
    ×