search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி10 கிரிக்கெட் லீக்: பெங்கால் டைகர்ஸ், மரதா அரேபியன்ஸ், பஞ்சாபி லெஜண்ட்ஸ், பாக்டூன்ஸ் வெற்றி
    X

    டி10 கிரிக்கெட் லீக்: பெங்கால் டைகர்ஸ், மரதா அரேபியன்ஸ், பஞ்சாபி லெஜண்ட்ஸ், பாக்டூன்ஸ் வெற்றி

    ஷார்ஜாவில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் பெங்கால் டைகர்ஸ், மராத்தா அரேபியன்ஸ், பஞ்சாபி லெஜண்ட்ஸ், பாக்டூன்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

    ஷார்ஜா:

    ஷார்ஜாவில் டி10 கிரிக்கெட் லீக் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. முதலாவதாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியும், பெங்கால் டைகர்ஸ் அணியும் மோதின. 

    இதில் டாஸ் வென்ற பஞ்சாபி லெஜண்ட்ஸ் முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லுக் ரான்கி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான உமர் அக்மல் 25 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய சோயிப் மாலிக் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் எடுத்து போல்டாகி வெளியேறினார். மற்ற வீரர்கள் ரன்குவிக்க தவறியதையடுத்து பஞ்சாபி லெஜண்ட்ஸ் 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. 

    இதையடுத்து 100 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்கால் டைகர்ஸ் சீரான இடைவேளியில் விக்கெட்டை இழந்தது. இருப்பினும் டெர்போர்ட் (12), சர்பிராஸ் அகமது (15), மில்லர் (15), அன்வர் அலி (14), ஆமீர் யாமின் (18), மொகமது நவீத் (11) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். பெங்கால் டைகர்ஸ் 9.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.



    இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் மரதா அரேபியன்ஸ் அணியும், டீம் ஸ்ரீலங்கா அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த டீம் ஸ்ரீலங்கா 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் குவித்தது. சந்திமல் 24 பந்தில் அவுட்டாகாமல் 37 ரன்னும், ஜெயசூர்யா 11 பந்தில் 28 ரன்னும், ராம்புக்வெல்லா 10 பந்தில் 22 ரன்னும் சேர்த்தனர்.

    பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மரதா அரேபியன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக கம்ரான் அக்மல், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஹேல்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கம்ரான் அக்மல் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரூசோவ் அதிரடியாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 18 பந்தில் 49 ரன்கள் ( 6 சிக்ஸர்) எடுத்தார். ரூசோவ் இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதிசெய்தார்.



    தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில், கேரளா கிங்ஸ் - பஞ்சாபி லெஜண்ட்சை எதிர்கொண்டது. இதில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் முதலில் பந்துவீசியது. முதலில் விளையாடிய கேரளா கிங்ஸ் அணி 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஸ்டெர்லிங் (46), மார்கன் (21), பூரன் (20) சிறப்பாக விளையாடினர்.

    இதையடுத்து 115 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாபி லெஜண்ட்ஸ் களமிறங்கியது. அந்த அணி 9 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷோயிப் மாலிக் அதிரடியாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25 பந்தில் 60 ரன்கள் ( 6 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்தார். உமர் அக்மல் 13 பந்தில் 31 ரன்கள் (3 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்தார்.



    நான்காவது லீக் ஆட்டத்தில் பாக்டூன்ஸ் - டீம் ஸ்ரீலங்கா அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸ் வென்ற பாக்டூன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 56 ரன்கள் (5 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அகமது ஷெசாத் 12 பந்தில் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். பாக்டூன்ஸ் அணி 10 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டீம் ஸ்ரீலங்கா களமிறங்கியது. அந்த அணியினர் பாக்டூன்ஸ் அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் திணறினர். ஹசரங்கா டீ சில்வா 31 ரன்களும், ராம்புக்வெல்லா 18 ரன்களும் எடுத்தனர். இதனால் அந்த அணி 10 ஓவர்களில்  7 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் பாக்டூன்ஸ் அணி வெற்றி பெற்றது.

    இன்று நடைபெறும் பிளே ஆப் சுற்று போட்டிகளில் பெங்கால் டைகர்ஸ் - பாக்டூன்ஸ், கேரளா கிங்ஸ் - டீம் ஸ்ரீலங்கா, மரதா அரேபியன்ஸ் - பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
    Next Story
    ×