search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஸ்மித் சதத்தால் 26 ரன்கள் முன்னிலை பெற்றது ஆஸி.; இங்கிலாந்து 33/2
    X

    ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஸ்மித் சதத்தால் 26 ரன்கள் முன்னிலை பெற்றது ஆஸி.; இங்கிலாந்து 33/2

    பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் ஸ்மித்தின் அபார சதத்தால் இக்கட்டான நிலையில் இருந்து தப்பிய ஆஸ்திரேலியா 26 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் முதல் டெஸ்ட் கடந்த 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஸ்டோன்மேன் (53), அடுத்து களமிறங்கிய வின்ஸ் (83), 5-வது வீரராக களம் இறங்கிய தாவித் மலன் (56) ஆகியோரின் அரைசதங்களால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 302 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் பான்கிராஃப்ட் (5), வார்னர் (26) சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கவாஜா 11 ரன்னிலும், ஹேண்ட்ஸ்காம்ப் 14 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    இதனால் ஆஸ்திரேலியா 76 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 5-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்மித் உடன் இடது கை பேட்ஸ்மேன் ஷேன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைமையை அறிந்து நிதானமாக விளையாடியது. குறிப்பாக கேப்டன் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஸ்மித் அரைசதம் அடிக்க, மார்ஷ் நிலைத்து நின்ற விளையாட, நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 64 ரன்களுடனும், ஷேன் மார்ஷ் 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மார்ஷ் அரைசதம் அடித்தார். ஆனால், 51 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 141 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.

    அடுத்து வந்த பெய்ன் 13 ரன்னிலும், ஸ்டார்க் 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய ஸ்மித் சதம் அடித்தார். அவர் 261 பந்தில் 9 பவுண்டரியுடன் சதம் அடித்தார்.

    8-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கம்மின்ஸ் 42 ரன்கள் எடுத்து ஸ்மித்துக்கு உறுதுணையாக இருந்தார். அடுத்து வந்த ஹசில்வுட் 6 ரன்னிலும், லயன் 9 ரன்னிலும் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 130.3 ஓவரில் 328 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.



    ஸ்மித் 141 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ஸ்மித்தின் அபார ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 26 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    பின்னர் 26 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஹசில்வுட்டின் அபார பந்து வீச்சில் இங்கிலாந்து தொடக்க விக்கெட்டுக்களை விரைவில் இழந்தது. அலஸ்டைர் குக் 7 ரன்னிலும், வின்ஸ் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு ஸ்டோன்மேன் உடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோன்மேன் 19 ரன்னுடனும், ஜோ ரூட் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



    தற்போது வரை இங்கிலாந்து 7 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கைவசம் 8 விக்கெட்டுக்கள் உள்ளன. நாளைய 4-வது நாள் முழுவதும் நிலைத்து நின்று விளையாடினால் மட்டுமே இங்கிலாந்து பிரிஸ்பேன் டெஸ்டில் தோல்வியை தவிர்க்க முடியும்.

    அல்லது 200 ரன்கள் முன்னிலைப் பெற்றால் ஆஸ்திரேலியாவிற்கு சவாலானதாக இருக்கும். இதனால் பிரிஸ்பேன் டெஸ்ட் பரபரப்பை எட்டியுள்ளது.
    Next Story
    ×