search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால், பிரனாய் 2-ம் சுற்றில் தோல்வி
    X

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால், பிரனாய் 2-ம் சுற்றில் தோல்வி

    ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இரண்டாம் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். பி.வி.சிந்து மட்டுமே களத்தில் உள்ளார்.
    கவ்லூன்:

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் காலிறுக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறினார்.

    ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி கவ்லூன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையும், முன்னாள் நம்பர்-1 வீராங்கனையுமான சாய்னா நேவால் மகளிர் ஒற்றையர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனை சென் யுபெயை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை சாய்னா கைப்பற்றினார். ஆனால், அதன்பின்னர் எழுச்சி பெற்ற சீன வீராங்கனை அடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றி அசத்தினார். இறுதியில் சாய்னா 21-18, 19-21, 10-21 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

    இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 10ம் தரநிலை வீரரான பிரனாய், ஜப்பான் வீரர் கசுமசா சகாயிடம் 21-11, 10-21, 15-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். பருபள்ளி காஷ்யப், சவுரப் வர்மா ஆகியோர் முதல் சுற்றிலேயே வெளியேறினர்.

    முன்னதாக இரண்டாம் தரநிலை வீராங்கனையான பி.வி.சிந்து, மூன்றாம் தரநிலையில் உள்ள ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை 21- 14, 21-17 என்ற நேர்செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதியில் அவர் ஜப்பானின் யமகுச்சியை எதிர்கொள்கிறார்.

    இதன்மூலம் இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில்  பி.வி. சிந்து மட்டுமே தற்போது பதக்கத்துக்கான போட்டியில் உள்ளார்.
    Next Story
    ×