search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் பிரிஸ்பேன் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 196/4
    X

    ஆஷஸ் பிரிஸ்பேன் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 196/4

    ஆஷஸ் பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோன்மேன், வின்ஸ் அரைசதம் அடித்தனர்.
    கிரிக்கெட் போர் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் வார்னர், பான்கிராஃப்ட், கவாஜா, ஸ்மித், ஹேண்ட்ஸ்காம்ப், ஷேன் மார்ஷ், பெய்ன், ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட், லயன் ஆகியோர் இடம்பிடித்தனர். ஆஸ்திரேலிய தொடக்க பேட்ஸ்மேன் பான்கிராஃப்ட்டுக்கு இது முதல் போட்டியாகும்.

    இங்கிலாந்து அணியில் அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன், வின்ஸ், ஜோ ரூட், மலன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஜேக் பேர்டு, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பிடித்தனர்.



    டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2 ரன்கள் எடுத்த நிலையில் அலஸ்டைர் குக் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார்.



    அடுத்து ஸ்டோன்மேன் உடன் வின்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ் வேகத்தை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடியது. இதனால் ஆஸ்திரேலியா விக்கெட்டுக்கள் வீழ்த்த திணறியது.

    ஸ்டோன்மேன், வின்ஸ் ஆட்டத்தால் முதல்நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்திருந்தது. மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கும் நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது.



    பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஸ்டோன்மேன், வின்ஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். தொடர்ந்து விளையாடிய ஸ்டோன்மேன் 53 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார்.

    83 ரன்கள் எடுத்த நிலையில் வின்ஸ் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். ஜோ ரூட் 15 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

    5-வது விக்கெட்டுக்கு மலன் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல் நாள் ஆட்ட நேரம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் இங்கிலாந்து முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. மலன் 28 ரன்னுடனும், மொயீன் அலி 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×