search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வே 159 ரன்னில் சுருண்டு பரிதாபம்
    X

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வே 159 ரன்னில் சுருண்டு பரிதாபம்

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே 49 ரன்னுக்குள் கடைசி 7 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்னிங்சில் பரிதாபமாக 159 ரன்னில சுருண்டது.
    ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி 219 ரன்னில் சுருண்டது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 90 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் கிரிமர் 4 விக்கெட்டும், வில்லியம்ஸ் 3 விக்கெட்டும் வீ்ழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது. மசகட்சா ரன்ஏதும் எடுக்காமலும், மிர் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். அணியின் ஸ்கோர் 44 ரன்னாக இருக்கும்போது மிர் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து எர்வின் களம் இறங்கினார். இவர் மசகட்காவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அணியின் ஸ்கோர் 91 ரன்னாக இருக்கும்போது மசகட்சா 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிராண்டன் டெய்லர் 1 ரன்னிலும், வில்லியம்ஸ் 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிஷூ பந்தில் ஜிம்பாப்வே விக்கெட்டுக்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்தது. இதனால் ஜிம்பாப்வே அணி 159 ரன்னில் சுருண்டது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் என்ற நிலையில் இருந்த ஜிம்பாப்வே கடைசி 49 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்னிங்சில் பரிதாபமாக 159 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் பிஷூ அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஜிம்பாப்வே 159 ரன்னில் சுருண்டதால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 60 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    60 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 25 ரன்கள் எடுப்பதற்குள் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
    Next Story
    ×