search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டு அணியில் விளையாடுவேன்: ஸ்ரீசாந்த் பரபரப்பு பேட்டி
    X

    வெளிநாட்டு அணியில் விளையாடுவேன்: ஸ்ரீசாந்த் பரபரப்பு பேட்டி

    இந்திய அணியில் விளையாடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டதை அடுத்து வெளிநாட்டு அணியில் விளையாடுவேன் என கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின்போது இவர் மேட்ச் பிச்சில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி கோர்ட் ஸ்ரீசாந்தை கைது செய்தது. இதனால் பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது.

    ஸ்ரீசாந்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என அவரை கோர்ட் விடுதலை செய்தது. என்றாலும் பிசிசிஐ ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கவில்லை. இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஒரு நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. பிசிசிஐ-யால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் உயர்நீதிமன்றத்தால் குறுக்கிட இயலாது என்று கூறி, ஸ்ரீசாந்த் அயுட்கால தடையை நீக்கிய உத்தரவை திரும்ப பெற்றது.



    இந்நிலையில், துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கிடையே ‘‘இந்திய கிரிக்கெட்டில் விளையாடக் கூடாது என்றால் வெளிநாட்டு அணிகளில் விளையாடுவேன். பிசிசிஐ ஒரு தனியார் நிறுவனமாகும். அதனால் நான் வேறு அணியில் விளையாடுவதை அதனால் தடுக்க முடியாது. ஐசிசி என் மீது தடை விதிக்கவில்லை.

    இந்திய அணியில் மட்டுமே விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது ரஞ்சி கோப்பையில் கேரளா அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. கேரளா அணி ரஞ்சி டிராபி, இரானி கோப்பையை கைப்பற்றும் என நம்புகிறேன். ஆனால், இதுவெல்லாம் பிசிசிஐ கையில் உள்ளது’’ என ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்தார்.

    மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘‘நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தவறு. மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் விளையாட உள்ளன. லோதா கமிட்டியால் குற்றம் சுமத்தப்பட்ட 13 பேரின் நிலை என்ன ஆனது?. அதுகுறித்து யாராவது கேள்வி எழுப்பினீர்களா?. நான் என் உரிமைக்காக பேராடுவேன்’’ என குறிப்பிட்டிருந்தார்.
    Next Story
    ×