search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்: பிளங்கட்டின் துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து வெற்றி
    X

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்: பிளங்கட்டின் துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து வெற்றி

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    லண்டன்:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட், ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நடந்த டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில்
    இங்கிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் ரத்தானது.

    இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி பிரிஸ்டலில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் துல்லியமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர் இங்கிலாந்து அணியினரின் தொடக்க விக்கெட்டுகளை விரைவில் கைப்பற்றினர்.

    அதன்பின்னர், ஜோ ரூட் 79 பந்துகளில் 84 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 63 பந்துகளில் 73 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி தனது அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியினரை கலங்க வைத்தார். 57 பந்துகளில் 8 சிக்சர், 7 பவுண்டர் உள்பட 102 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 369 ரன்கள் எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டும், டெய்லர், பவல், நர்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதை தொடர்ந்து 370 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கிரிஸ் கெயில் அதிரடியாக விளையாடி 78 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தவிர வேறு யாரும் பொறுப்பாக விளையாடவில்லை.

    இதனால் அந்த அணி 39.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியில் தனது துல்லியமான பந்துவீச்சால் பிளங்கட் 5 விக்கெட்டுகளையும், அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது ஒருநாள் போட்டி 27-ம் தேதி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
    Next Story
    ×