search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2007 டி20 உலகக்கோப்பை கடைசி ஓவர்: டோனி அறிவுரையை நினைவு கூர்ந்தார் ஜோகிந்தர் சர்மா
    X

    2007 டி20 உலகக்கோப்பை கடைசி ஓவர்: டோனி அறிவுரையை நினைவு கூர்ந்தார் ஜோகிந்தர் சர்மா

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோற்றால் நீதான் பொறுப்பேற்க வேண்டும் என டோனி கூறியதை கடைசி ஓவரை வீசிய ஜோசிந்தர் சர்மா நினைவு கூர்ந்துள்ளார்.
    ஐ.சி.சி அறிமுகப்படுத்திய டி20 உலகக்கோப்பை முதன்முறையாக தென்ஆப்பிரிக்காவில் 2007-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் டோனி தலைமையிலான இந்தியா அணி கோப்பையை கைப்பற்றியது. சரியாக இன்றுடன் (செப்டம்பர் 24-ந்தேதி) இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதின் 10-ம் ஆண்டு நிறைவடைகிறது.

    அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தியது.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா காம்பீர் (75), ரோகித் சர்மா (30) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது.

    பின்னர் பாகிஸ்தான் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. இம்ரான் நசீர் (33), யூனிஸ்கான் (24), யாசீர் அராபத் (15) ஆகியோரின் ஆட்டத்தால் பாகிஸ்தான் இலக்கை நெருங்கியது.

    மிஸ்பா உல் ஹக் நங்கூரமாக நிற்க, பாகிஸ்தான் 19 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மா வீச மிஸ்பா அதை எதிர்கொண்டார்.

    முடிவு எப்படி இருக்கும் என ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமல்ல உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

    ஜோகிந்தர் சர்மா முதல் பந்தை வைடாக வீசினார். அதற்குப்பதிலாக வீசிய பந்தில் மிஸ்பா ரன் எடுக்கவில்லை. 2-வது பந்தை புல்டாசாக வீசினார். இந்த பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார் மிஸ்பா. இதனால் கடைசி 4 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்று ரசிகர்கள் எண்ணினர்.



    3-வது பந்தை ஆஃப்ஸ்டம்பிற்கு சற்று வெளியில் வீசியதை ஷார்ட் பைன் லெக் திசையை நோக்கி ஸ்கூப் ஷாட் அடித்தார் மிஸ்பா. பந்து எட்ஜ் ஆகி ஸ்ரீசந்த் கையில் தஞ்சமடைந்தது. இதனால் இந்தியா 3 பந்துகள் மீதமுள்ள நிலையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. மிஸ்பா 4 சிக்சர்கள் மூலம் 38 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார்.

    இந்த போட்டியில் யாருக்கு நெருக்கடி இருந்ததோ இல்லையோ, கடைசி ஓவரை வீசிய ஜோகிந்தர் ஷர்மாவிற்கு அதிக அளவில் நெருக்கடி இருந்தது.



    அந்த சமயத்தில் கேப்டன் டோனி கூறிய அறிவுரையை ஜோகிந்தர் ஷர்மா நினைவு கூர்ந்துள்ளார். டோனி குறித்து ஜோகிந்தர் கூறுகையில் ‘‘கடைசி ஓவரை வீசுவதற்கு முன்பு டோனி என்னிடம் வந்து, நாம் இந்த போட்டியில் தோல்வியடைந்தால், நீதான் தோல்விக்கான பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். ரிலாக்ஸாக இருங்கள். 1 ரன் வித்தியாசம் என்றாலும் அது வெற்றிதான் என்று கூறினார். இதுதான் என்னடைய சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த காரணமாக இருந்தது’’ என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×