search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தேர்வான ஜம்மு-காஷ்மீரின் 27 வயது வீராங்கனை
    X

    தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தேர்வான ஜம்மு-காஷ்மீரின் 27 வயது வீராங்கனை

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய அகாடமியான பெங்களூரு முகாமிற்கு வருமாறு ஜம்மு-காஷ்மீர் வீராங்கனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி கோப்பையை நழுவ விட்டனர். என்றாலும், 120 கோடி மக்களின் மனதை வென்றனர்.

    இந்த தொடருக்குப்பின் இந்திய பெண்கள் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலகக்கோப்பை தொடருக்குப்பின் இந்திய பெண்கள் அணி எந்த தொடரிலும் விளையாடவில்லை.

    இதனால் அவர்களுக்கு நீண்ட நாள் ஓய்வு கிடைத்தது. இந்நிலையில் நாட்டின் முன்னணி வீராங்கனைகள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வருமாறு பிசிசிஐ தகவல் அனுப்பியுள்ளது.

    இதில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான ஜெசியா அக்தரும் ஒருவர். முதன்முறையாக காஷ்மீர் பகுதியில் இருந்து வீராங்கனை ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தின் முதல் வீராங்கனை என்பதால் ஜெசியா அக்தர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.

    தேசிய அகாடமியில் இருந்து அழைப்பு வந்தது குறித்து ஜெசியா அக்தர் கூறுகையில் ‘‘காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒவ்வொருவரும் சவாலான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். விளையாட்டில் பெண்களை ஊக்கப்படுத்துவதற்கான வாய்ப்புகள் காஷ்மீரில் குறைவு. நாங்கள் அடுத்த நாள் உதிக்கும் சூரியனை பார்ப்போமோ என்பது கூட உறுதியாக தெரியாது. நான் பஞ்சாப் மாநிலத்திற்கு சென்று, அகாடமியில் இடம்பிடிக்க கடவுள் வாய்ப்பு வழங்கியுள்ளார்.



    ராஜ்நாத் சிங் காஷ்மீர் வந்திருந்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் நண்பர்களுடன் இந்த செய்தியை கொண்டாடக்கூட முடியவில்லை. ராஜ்நாத் சிங் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பில் இருந்தே டெலிபோன் மற்றும் இன்டர்நேட் சேவைகள் முடக்கப்பட்டன.

    இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பையில் வீராங்கனைகளின் செயல்பாடுகள் இந்தியாவையும், காஷ்மீர் மக்களையும் ஈர்த்தது. கடினமாக உழைத்து இந்திய அணியில் இடம்பெறுவேன் என்று என் தந்தைக்கு உறுதியளித்தேன். எனது கனவை நினைவாக்கும் வகையில் கடவுள் அருள் புரிந்துள்ளார். காஷ்மீர் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். ஆனால் போதுமான ஊக்குவிப்பு மற்றும் வசதிகள் இல்லை என்பதை உலகிற்கு தெரியப்படுத்தவும், மற்றவர்களுக்கு உதாரணமாகவும் இருக்க விரும்புகிறேன். பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் எனது வாழ்க்கையை மாற்றியது’’ என்றார்.
    Next Story
    ×