search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி
    X

    அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி

    அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் முன்னணி வீரர் ரோஜர் பெடரர் அர்ஜெண்டினா வீரரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

    வாஷிங்டன்:

    டென்னிஸ் விளையாட்டின் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் போட்டிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர், அர்ஜெண்டினாவின் ஜீயான் மார்ட்டின் டெல் போட்ரோவை எதிர்கொண்டார். போர்டோ முந்தைய போட்டியில் ஆறாம்நிலை வீரரான டோம்னிக் தெயிமை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தார்.

    காலிறுதி போட்டியின் முதல் செட்டை அர்ஜெண்டினா வீரர் டெல் போட்ரோ 7-5 என கைப்பற்றினார். அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடிய பெடரர் இரண்டாம் செட்டை 6-3 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. 

    அதைத்தொடர்ந்து நடந்த மூன்றாவது செட்டை டெல் போட்ரோ 7-6 என போராடி கைப்பற்றினார். இதனால் பெடரருக்கு நெருக்கடி அதிகரித்தது. அதை பயன்படுத்திக்கொண்ட டெல் போட்ரோ நான்காவது செட்டையும் 6-4 என கைப்பற்றினார். இதன்மூலம் 7-5, 3-6, 7-6, 6-4 என்ற செட்கணக்கில் டெல் போட்ரோ வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றார்.

    முன்னணி வீரர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறினார். அரையிறுதி போட்டியில் டெல் போட்ரோ, முதல்நிலை வீரரான ரபேல் நடாலை எதிர்கொள்ள இருக்கிறார். மற்றொரு அரையிறுதி போட்டியில் ஸ்பெயினின் பப்லோ கரீனோ பஸ்டா - தென்னாப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுக்கு முதல்முறையாக நான்கு அமெரிக்க வீராங்கனைகள் தகுதிபெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பிரிவின் அரையிறுதி போட்டிகளில் வீனஸ் வில்லியம்ஸ் - ஸ்லோயேன் ஸ்டெப்ஹென்ஸ், கொகொ வண்டிவேகி - மேடிசன் கீஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
    Next Story
    ×