search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லா லிகா பட்டம் வெல்வதில் கடும் போட்டி: வெற்றியுடன் முன்னேறும் ரியல் மாட்ரிட்-பார்சிலோனா
    X

    லா லிகா பட்டம் வெல்வதில் கடும் போட்டி: வெற்றியுடன் முன்னேறும் ரியல் மாட்ரிட்-பார்சிலோனா

    லா லிகா தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகள் 4-1 என எதிரணிகளை வீழ்த்தியதால் சாம்பியன் பட்டம் வெல்வதில் கடும்போட்டி நிலவுகிறது.
    லா லிகா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்திற்காக ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    நேற்றிரவு நடைபெற்ற லா லிகா லீக் போட்டி ஒன்றில் ரியல் மாட்ரிட் - செவிலா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 10-வது நிமிடத்தில் நசோ பெர்னாண்டஸ் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் 23-வது நிமிடத்தில் நம்பிக்கை நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் ரியல் மாட்ரிட் 2-0 என் முன்னிலைப் பெற்றிருந்தது.

    2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் 49-வது நிமிடத்தில் செவிலா அணியின் ஸ்டீவன் ஜோவெடிக் ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 2-1 என இருந்தது. அதன்பின் 78-வது நிமிடத்தில் ரொனால்டோ மேலும் ஒரு கோல் அடித்தார். 84-வது நிமிடத்தில் டோனி க்ரூஸ் ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 4-1 என அபார வெற்றி பெற்றது.

    மற்றொரு லீக் ஆட்டத்தில் பார்சிலோனா லாஸ் பால்மாஸ் அணிகள் மோதின. நெய்மர் ஹாட்ரிட் கோல் (25, 76 மற்றும் 71-வது நிமிடம்) அடித்தார். சுவாரஸ் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4 கோல்கள் அடித்தது. லாஸ் பால்மாஸ் அணியின் பிகாஸ் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4-1 என வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா 37 போட்டிகள் முடிவில் 87 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் 36 போட்டிகளில் 87 புள்ளிகள் பெற்று கோல்கள் அடிப்படையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    பார்சிலோனா அணிக்கு இன்னும் ஒரு போட்டியும், ரியல் மாட்ரிட் அணிக்கு இரண்டு போட்டிகளும் உள்ளன. இந்த இரண்டில் ஒரு போட்டியில் ரியல் மாட்ரிட் தோல்வியடைந்து, பார்சிலோனா கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் பார்சிலோனா சாம்பியன் பட்டத்தை வென்றுவிடும். ரியல் மாட்ரிட் இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று, ஒன்றில் டிரா செய்தாலே சாம்பியன் பட்டத்தை வென்றுவிடும்.

    இதனால் சாம்பியன் பட்டத்தை வெல்வதில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
    Next Story
    ×