search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை வீழ்த்த நடந்த சதிதான் 2ஜி வழக்கு: ஆ.ராசா பரபரப்பு பேட்டி
    X

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை வீழ்த்த நடந்த சதிதான் 2ஜி வழக்கு: ஆ.ராசா பரபரப்பு பேட்டி

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை வீழ்த்த நடத்தப்பட்ட சதிதான் 2ஜி வழக்கு என முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். #ARaja #2Gcase
    புதுடெல்லி:

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, 2ஜி வழக்கில் தன் தரப்பு நியாயங்களை விளக்கி ஆ.ராசா எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியானது. 

    அதில், தனது நியாயமான நடவடிக்கைகளை காப்பதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், பிரதமர் மன்மோகன்சிங்கும் காட்டிய உணர்ச்சிமிகுந்த மவுனம், நமது நாட்டின் கூட்டு மனசாட்சியை மவுனம் ஆக்குவதுபோல அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டை கூறிய சிஏஜி வினோத் ராய் மீதும் குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்நிலையில், ஆ.ராசா இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    நேர்மையாக நல்ல திட்டங்களைக் கொடுத்த யுபிஏ (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) அரசை வீழ்த்த வேண்டும் என்று ஒரு சதி நடந்திருக்க வேண்டும் என்பது என் தீர்க்கமான கருத்து. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை வீழ்த்த நடத்தப்பட்ட சதிதான் 2ஜி வழக்கு. அந்த சதிக்கு வினோத் ராய், அறிக்கை மூலமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் மூலம் இந்த நாட்டை ஏமாற்றி அதன் வாயிலாக இந்த அரசாங்கத்தை வீழ்த்தி இருக்கிறார்கள் என கருதுகிறேன்.

    அலைக்கற்றை ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் ஏதோ நடந்திருப்பதாக பிரதமரை (மன்மோகன் சிங்) நம்ப வைத்துள்ளனர். குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் மவுனமாக இருந்தது வருத்தம் அளித்தது. அவர்களின் மவுனம்தான் யுபிஏ அரசாங்கத்தை வீழ்த்தி விட்டது. 



    2ஜி வழக்கில் வழங்கப்பட்ட அனைத்து தீர்ப்புகளும் சரி என கூற முடியாது. தீர்ப்பில் பிழைகள் இருந்ததற்கு சிஏஜி தான் காரணம்.  வழக்கு விசாரணையின் போது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு நியாயமாக மீண்டும் அனுமதி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ARaja #2Gcase #tamilnews
    Next Story
    ×