search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபங்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு
    X

    திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபங்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு

    திருமலை-திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் என இணை அதிகாரி போலா.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    திருமலை:

    திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனில், தேவஸ்தான என்ஜினீயர்கள், தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி போலா.பாஸ்கர் கலந்து கொண்டு பேசினார்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபங்கள் பல்வேறு ஊர்களில் உள்ளன. அதில், நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்கள் நேரடியாக வந்து முன்பணம் செலுத்தி, முன்பதிவு செய்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அதில், சில குளறுபடிகள் நடப்பதாக தேவஸ்தானத்துக்குத் தகவல்கள் வருகின்றன.

    எனவே திருமலை-திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபத்தை பயன்படுத்தப்பட உள்ள பொதுமக்கள் இனிமேல் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறை வருகிற 24-ந்தேதி ரத சப்தமி விழாவில் இருந்து அமலுக்கு வருகிறது. இந்த நடைமுறையை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

    பொதுமக்கள் நேரடியாக வந்து கல்யாண மண்டபங்களை முன்பதிவு செய்த முறை (அதாவது இன்று சனிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது. இனிமேல், கல்யாண மண்டபங்களை தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகளே நிர்வாகம் செய்வார்கள். முதல் முறையாக, சித்தூர் மாவட்டத்தில் உள்ள 39 கல்யாண மண்டபங்களில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

    அதைத்தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பல்வேறு இடங்களில் உள்ள கல்யாண மண்டபங்களில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வரும். பொதுமக்கள் கல்யாண மண்டபங்களை முன்பதிவு செய்ய, அந்தந்த மண்டப மேலாளர்களிடம் விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தேவஸ்தான என்ஜினீயர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×