search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கடல்நீரை குடிநீராக்கும் அதிநவீன ஜீப்பை மோடிக்கு பரிசாக அளித்த இஸ்ரேல் பிரதமர்

    ஆறுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு குஜராத் மாநிலத்தில் இன்று அசுத்தமான நீர் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் அதிநவீன ஜீப்பை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தார். #modi #desalinationjeep
    அகமதாபாத்:

    இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இன்று காலை குஜராத் தலைநகர் அகமதாபாத் நகருக்கு வந்த நேதன்யாகு, பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆற்றங்கரையில் உள்ள காந்தி சமாதிக்கு சென்றார்.

    அங்குள்ள காந்தியின் மார்பளவு சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஆசிரம வளாகத்தில் சுமார் 20 நிமிடங்கள் இருந்த அவர், மகாத்மா காந்தி வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்டார். 

    இன்று மாலை அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள பாவ்லா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பெஞ்சமின் நேதன்யாகு அசுத்தமான நீர் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் அதிநவீன ஜீப்பை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தார். அந்த ஜீப்பை இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்திற்குட்பட்ட சுய்கம் கிராம மக்களுக்கு வீடியோ கான்பிரசிங் மூலம் பிரதமர் மோடி அர்ப்பணம் செய்தார்.

    சுமார் 71 லட்சம் ரூபாய் விலையிலான இந்த ஜீப் ஒருநாளைக்கு சுமார் 80 ஆயிரம் லிட்டர் அசுத்தமான ஆற்றுநீர் மற்றும் 20 ஆயிரம் லிட்டர் அளவிலான உவர்ப்புத்தன்மையுடன் கூடிய கடல்நீரை உலகத்தரம் வாய்ந்த (உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கேற்ப) குடிநீராக மாற்றும் ஆற்றல் கொண்டதாகும்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ’கடந்த ஆண்டு நான் இஸ்ரேல் நாட்டுக்கு சென்றிருந்தபோது என்னை ஒரு ஜீப்பில் அமரவைத்து பெஞ்சமின் நேதன்யாகு ஓட்டிச் சென்றார். அசுத்த நீரை குடிநீராக சுத்திகரிக்கும் அந்த வாகனத்தை அன்பளிப்பாக இங்கு அவர் கொண்டு வந்துள்ளார். இந்த அன்பளிப்புக்காக அவருக்கு இந்திய மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.

    இந்த வாகனம் இயங்கும் விதத்தை இப்போது காணொளி மூலம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். எல்லைப்பகுதியில் உள்ள சுய்கமில் நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனம் மூலம் கிடைக்கும் தூய்மையான குடிநீர் அங்குள்ள இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் அளிக்கப்படும்’ என்று குறிப்பிட்டார். #tamilnews #desalinationjeep #modi
    Next Story
    ×