search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா உறவினர் வீடுகளில் வருமான வரி சோதனை நீடிப்பு - சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி தீவிரம்
    X

    சசிகலா உறவினர் வீடுகளில் வருமான வரி சோதனை நீடிப்பு - சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி தீவிரம்

    சசிகலா உறவினர் வீடுகளில் நேற்று 4-வது நாளாக வருமான வரி சோதனை நீடித்தது. இதுவரை கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
    சென்னை:

    வருமான வரித்துறை “ஆபரேஷன் கிளன் மணி” என்ற பெயரில், வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை தொடங்கி இருக்கிறது.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை, திருச்சி, நாமக்கல் கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, புதுச் சேரியிலும் கடந்த 9-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு உடையவர்களின் 187 இடங்களில் சுமார் 1,600 அதிகாரிகள் ஈடுபட்டனர்.



    சசிகலா, டி.டி.வி.தினகரன், திவாகரன், நடராஜன், இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆகியோரின் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் தொடங்கிய இந்த சோதனை இடைவிடாமல் நேற்று 4-வது நாளாக நீடித்தது.

    சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் சசி கலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் சுபஸ்ரீ தலைமையில் 7 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணபிரியா பெயரில் உள்ள சொத்துகள், முதலீடுகள், அவருடைய வங்கி கணக்குகள் ஆகியவற்றின் ஆவணங்களையும், தங்கம்- வைர நகைகள் குறித்த விவரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பூஜை அறை, கழிப்பறை, படுக்கை அறை என வீடு முழுவதையும் அலசி ஆராய்ந்தனர்.



    வீட்டின் சுவர்கள், பால்கனியையும் அதிகாரிகள் விட்டு வைக்கவில்லை. அங்கு ஏதேனும் நகை, பணம், ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதேபோல், சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகத்திலும் 4-வது நாளாக நேற்று வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது, ஜெயா டி.வி.யின் பொது மேலாளர் நடராஜன் மற்றும் 4 கணக்குத்துறை மேலாளர்கள் என 5 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பொது மேலாளர் நடராஜன் வீட்டில் இருந்த சில ஆவணங்கள் ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.



    அதே போன்று ஜெயா டி.வி. அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, தியாகராயநகரில் உள்ள ஜெயா டி.வி. தலைமை நிர்வாக அதிகாரியும், சசிகலா அண்ணன் மகனுமான விவேக் ஜெயராமனின் வீட்டில் சோதனை நடத்தி கொண்டிருந்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக அவர்கள் விவேக்கிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    ஜெயா டி.வி. அலுவலகத்தில் சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்டு இருந்த பல்வேறு ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் தனியாக சி.டி.க் களில் பதிவு செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும், ஜெயா டி.வி. கணக்குத்துறை அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்கள், லேப்-டாப்கள் அனைத்தையும் வருமானவரிதுறை அதிகாரிகள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தினர்.



    நேற்று 4-வது நாளாக ஜெயா டி.வி. அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில், விவேக்கின் அறையில் திறக்கப்படாமல் இருந்த பெட்டகம் ஒன்றை நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திறந்து பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளனர். அதற்கான சாவி தன்னிடம் இல்லை என்றும், அது விவேக்கிடம் தான் இருப்பதாகவும் நடராஜன் தெரிவித்து உள்ளார்.

    அதைத் தொடர்ந்து நேற்று மதியம் 2 மணி அளவில் சாவி கொண்டு வரப்பட்டு, 3 நாட்களுக்கு பிறகு அந்த பெட்டகம் திறக்கப்பட்டு, அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஜெயா டி.வி. அலுவலகத்தில் தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனையும் நேற்றுடன் முடிவடைந்தது.

    ஈக்காட்டுதாங்கலில் உள்ள அ.தி.மு.க.வின் நாளிதழான நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகத்தில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று முன்தினம் இரவே முடிவடைந்தது.

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள மிடாஸ் மதுபான ஆலை மற்றும் அதன் பதிவு அலுவலகத்தில் தொடர்ந்து நேற்று 4-வது நாளாக சோதனை நடந்தது. இதேபோல மதுபான ஆலைக்கு அட்டைப்பெட்டிகள் வினியோகம் செய்யும் ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ், ஸ்ரீசாய் கார்டன்ஸ் ஆகிய நிறுவனங்களில் 3-வது நாளாக சோதனை நடந்தது. இந்த சோதனையில் வெளிநாட்டிற்கு மதுபானங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    இதன் அடிப்படையில் மதுபான ஆலை மேலாளர் மற்றும் அட்டைப்பெட்டி வினியோகம் செய்யும் ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ், ஸ்ரீசாய் கார்டன்ஸ் ஆகிய நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளிடமும், வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு சொந்தமான மகளிர் கல்லூரி உள்ளிட்ட 14 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. ஏற்கனவே 13 இடங்களில் சோதனை முடிவடைந்து விட்ட நிலையில் கல்லூரியில் மட்டும் நேற்று அதிகாலை வரை சோதனை நீடித்தது. கடந்த 4 நாட்களாக இரவு, பகலாக கல்லூரியில் தொடர்ந்து நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட கார்களில் எடுத்துச் சென்றனர்.

    கல்லூரியில் உள்ள ஒரு அறைக்கு வருமான வரித் துறையினர் “சீல்” வைத்து உள்ளனர். அங்கு சில முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    சோதனையை முடித்துக்கொண்டு கல்லூரியில் இருந்து வெளியே வந்த வருமான வரி அதிகாரிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ய இருப்பதாகவும், ஆய்வின் முடிவுகள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க முடியாது என்றும் கூறினார்கள். திவாகரனிடம் நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சசிகலாவுக்கு சொந்தமான கிரீன் டீ எஸ்டேட்டில் நேற்று 4-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேற்று காலை 7 மணிக்கு ஒரு காரில் 3 அதிகாரிகளும், 9.30 மணியளவில் மற்றொரு காரில் 4 வருமான வரித்துறை அதிகாரிகளும் மீண்டும் கிரீன் டீ எஸ்டேட்டுக்கு சென்று 4-வது நாளாக சோதனை மேற்கொண்டனர்.

    நாமக்கல் கூட்டுறவு காலனியில் உள்ள சசிகலாவின் வக்கீல் செந்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி, செந்திலின் ஜூனியர் வக்கீல் பாண்டியன், செந்திலுடன் இணைந்து தொழில் செய்து வரும் சுப்பிரமணியம் ஆகியோரின் வீடுகளிலும், செந்திலின் நண்பர் பிரகாஷின் அலுவலகத்திலும் கடந்த 9-ந் தேதி முதல் 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் 5 இடங்களிலும் வருமானவரி சோதனை முடிவுக்கு வந்தது.

    புதுச்சேரியில் உள்ள ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி மற்றும் வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனத்திலும் நேற்று 4-வது நாளாக வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று மாலை 6 மணியுடன் அங்கு சோதனை முடிந்தது.

    இவ்வாறு பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அந்த ஆவணங்களை அவர்கள் சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு எடுத்து வந்து உள்ளனர். தணிக்கை அதிகாரிகளின் உதவியுடன் அந்த ஆவணங்களை மதிப்பிடும் பணியில் வருமான வரி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட தங்கம், வைர நகைகள் உள்ளிட்டவற்றை மதிப்பிடும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இதுபற்றி வருமான வரி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், ஆவணங்களை மதிப்பிடும் பணி நடந்து வருவதாகவும், அடுத்த கட்டமாக சம்பந்தப்பட்டவர் களை நேரில் அழைத்து விசாரணை நடத்த தீர்மானித்து இருப்பதாகவும் கூறினார்.

    என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன என்ற தகவலை தெரிவிக்க மறுத்த அவர், பெருமளவில் வரி ஏய்ப்பு மோசடி நடந்து இருப்பதாக சோதனையில் தெரியவந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

    வருமான வரி அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களுக்கு ‘சம்மன்’ அனுப்பி விசாரிக்கும்போதுதான், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் எத்தனை போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன? அவற்றில் எவ்வளவு கருப்பு பணம் முதலீடு செய்யப்பட்டது? எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்தது? என்பன போன்ற விவரங்கள் முழுமையாக தெரியவரும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 
    Next Story
    ×