search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை நடைமேம்பால நெரிசல்: தவறான வார்த்தை புரிதலால் ஏற்பட்ட பெரும் துயரம்
    X

    மும்பை நடைமேம்பால நெரிசல்: தவறான வார்த்தை புரிதலால் ஏற்பட்ட பெரும் துயரம்

    பூக்கள் விழுந்து விட்டன என்று யாரோ கூறியதை பாலம் விழுந்து விட்டதாக புரிந்து கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானதாக அந்த விபத்தில் இருந்து உயிர் தப்பியவர் கூறியுள்ளார்.
    மும்பை:

    பூக்கள் விழுந்து விட்டன என்று யாரோ கூறியதை பாலம் விழுந்து விட்டதாக புரிந்து கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானதாக அந்த விபத்தில் இருந்து உயிர் தப்பியவர் கூறியுள்ளார்.

    மும்பையில் எல்பின்ஸ்டோன் சாலை ரெயில்வே நிலையத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி காலையில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. அவர்கள் குறுகலான நடைமேம்பாலம் ஒன்றில் சென்று கொண்டு இருந்தனர். திடீரென அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் பற்றி மேற்கு ரெயில்வே நேற்று விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த பகுதியில் பூக்கள் மற்றும் பிற பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடந்து வந்துள்ளது.

    இந்நிலையில், கூட்ட நெரிசலில் உயிர் தப்பிய 19 வயது இளம்பெண் ஒருவர் விசாரணை குழுவிடம் கூறியுள்ள தகவலில், பூ விற்பனை செய்யும் ஒருவர் (பூல் கிர் கயா) பூக்கள் விழுந்து விட்டன என கூறியுள்ளார். இது (புல் கிர் கயா) பாலம் விழுந்து விட்டது என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதனால் கூட்டத்தில் ஏற்பட்ட பயத்தினால், படிகளில் இருந்த மக்கள் ஓடியுள்ளனர். அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவத்தில் பயிற்சி வகுப்புக்கு சென்று கொண்டிருந்த அந்த இளம்பெண் சிறிய அளவில் காயமடைந்து உள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

    எனினும், மேற்கு ரெயில்வே தலைமை செய்தி தொடர்பு அதிகாரி ரவீந்திர பக்கர் கூறும்பொழுது, புரளியால் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது என உறுதியாக ஒரு முடிவுக்கு வர முடியாது. மற்ற காயமடைந்த பயணிகளிடமும் விசாரணை நடத்தி விளக்கம் கேட்க உள்ளோம். எங்களது விசாரணையில் காயமடைந்த பயணிகள், மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர் மக்கள் மற்றும் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் ஆகியோரிடம் இருந்தும் விளக்கம் பெறப்படும் என கூறியுள்ளார்.
    Next Story
    ×