search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கற்பழிப்பு வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை: சிறையில் உணவு உண்ண மறுத்த குர்மீத் சிங்
    X

    கற்பழிப்பு வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை: சிறையில் உணவு உண்ண மறுத்த குர்மீத் சிங்

    கற்பழிப்பு வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட குர்மீத் சிங் சிறையில் இரவு உணவை சாப்பிடவில்லை. நேற்று காலையிலும் பால் மட்டும் குடித்தார்.
    ரோடக்:

    கற்பழிப்பு வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட குர்மீத் சிங் சிறையில் இரவு உணவை சாப்பிடவில்லை. நேற்று காலையிலும் பால் மட்டும் குடித்தார்.

    அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் உள்ள ‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவர் குர்மீத்ராம் ரகீம் சிங் (வயது 50) மீது அந்த அமைப்பை சேர்ந்த 2 பெண்களை கற்பழித்ததாக 2002-ம் ஆண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த வழக்குகளை விசாரணை நடத்திய அரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு கடந்த 25-ந் தேதி குர்மீத் சிங் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து அவர் ரோடக் மாவட்டம் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 38 பேர் பலியானார்கள். 250-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த வழக்குகளில் சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி நேற்று முன்தினம் தண்டனை விவரங்களை அறிவித்தார். 2 கற்பழிப்பு வழக்குகளிலும் குர்மீத் சிங்குக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.15 லட்சம் அபராதமும் விதித்தார். இந்த தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் கூறியதால் குர்மீத் சிங் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

    தண்டனை அறிவிக்கப்பட்டதும் குர்மீத் சிங் கோர்ட்டு நடைபெற்ற சிறையின் நூலகத்தில் இருந்து அவரது அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். தீர்ப்புக்கு பின்னர் குர்மீத் சிங் சிறையில் யாருடனும் பேசவில்லை. தனது அறைக்குள்ளேயே சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே இருந்தார்.

    சிறைக்குள் இரவு உணவையும் அவர் சாப்பிடவில்லை. இரவில் அவ்வப்போது சிறிது தண்ணீர் மட்டுமே குடித்தார். நேற்று காலையும் அவர் பால் மட்டுமே குடித்ததாக சிறை அதிகாரி ஒருவர் கூறினார்.

    இதற்கிடையே குர்மீத் சிங்கின் வாரிசு யார்? என்பதற்கான போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதில் அவரது மகன் ஜஸ்மீத், வளர்ப்பு மகள் ஹனிபிரீத் மற்றும் தேரா அமைப்பின் தலைவி விபாசனா இன்சான் ஆகியோருக்கு இடையே இந்த போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் யார் தேரா அமைப்பின் அடுத்த தலைவர்? என்ற பிரச்சினை எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஆனாலும் தேரா அமைப்பு இதனை மறுத்துள்ளது. இப்போது இதுபற்றிய பிரச்சினை எழவில்லை. குர்மீத் சிங்குக்கு சி.பி.ஐ. கோர்ட்டு விதித்த தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கு தான் இப்போது முன்னுரிமை கொடுத்துள்ளோம் என்று தேரா அமைப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    30 வயதுகளில் இருக்கும் குர்மீத் சிங்கின் மகன் ஜஸ்மீத் பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஹர்மிந்தர் சிங்கின் மகளை திருமணம் செய்துள்ளார். ஒருவேளை ஜஸ்மீத் வாரிசாக அறிவிக்கப்பட்டால், அது தேரா அமைப்பின் பாரம்பரியத்தை தகர்ப்பதாக அமையும். அந்த அமைப்பில் தலைவராக இருப்பவரின் குடும்பத்தினர் யாரும் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவது இல்லை.

    குர்மீத் சிங்கின் தேவதை என்று அழைக்கப்படும் ஹனிபிரீத்தும் தேரா அமைப்பின் தலைவராக விரும்புவதாக கூறப்படுகிறது. விபாசனாவிடம் இதுபற்றி கேட்டபோது, ‘வாரிசு யார் என்பது பற்றிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆதரவாளர்கள் தங்கள் குரு மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள். இப்போதைக்கு தேரா அமைப்பின் கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன’ என்றார். 
    Next Story
    ×