search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரவில் ஊருக்கு செல்ல வழியில்லாததால் அரசு பஸ்சை கடத்திய தொழிலாளி
    X

    இரவில் ஊருக்கு செல்ல வழியில்லாததால் அரசு பஸ்சை கடத்திய தொழிலாளி

    இரவில் ஊருக்கு செல்ல வழியில்லாததால் அரசு பஸ்சை கடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் அலோஸ். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு ஊர் திரும்புவதற்காக இவர் கொல்லம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    இரவு நீண்ட நேரம் ஆகி விட்டதால் அலோஸ் செல்ல வேண்டிய இடத்திற்கு பஸ் இல்லை. இதனால் அவர் நள்ளிரவில் அந்த பஸ் நிலையத்தை சுற்றி, சுற்றி வந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு பஸ்சில் அவர் ஏறி பார்த்த போது அந்தபஸ்சில் சாவி இருந்ததை பார்த்தார்.

    உடனே அவருக்கு விபரீத எண்ணம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் அந்த பஸ்சை இயக்கி தனது ஊருக்கு ஓட்டிச் செல்ல தொடங்கினார். அந்த பஸ் சிறிது தூரம் சென்றதும் ஒரு வளைவில் திருப்ப முயன்ற போது அவரால் முடியாததால் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பஸ் மோதி பலத்த சேதம் அடைந்தது.

    உடனே அலோஸ் பயந்து போய் பஸ்சில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டார். வீட்டிற்கு சென்ற பிறகுதான் அவருக்கு தனது ஷுக்களை பஸ்சின் டிரைவர் இருக்கை அருகிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அந்த ஷுக்களை அவர் மிகவும் ஆசைப்பட்டு வாங்கி இருந்ததால் அதை இழப்பதற்கு அவருக்கு மனம் இல்லை. எனவே அந்த ஷுக்களை எடுப்பதற்காக மீண்டும் அந்த பஸ்சை நோக்கி சென்றார்.

    அதற்குள் விபத்து பற்றிய தகவல் அறிந்து போலீசாரும், மின் ஊழியர்களும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பொது மக்களும் திரண்டு அவர்களுக்கு உதவிக்கொண்டு இருந்தனர். கூட்டத்தை பயன் படுத்தி நைசாக பஸ்சில் ஏறிய அலோஸ் தனது ஷுக்களை எடுக்க முயற்சி செய்தபோது போலீஸ் பிடியில் சிக்கிக் கொண்டார். விசாரணையில் அவர் பஸ்சை கடத்தியவர் என்பது தெரியவந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×