search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை அதிர்ச்சி தகவல்
    X

    அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை அதிர்ச்சி தகவல்

    அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் வகையில், பனி லிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகையில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் பக்தர்கள் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது.

    இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நாளை தொடங்க உள்ளது. இது தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறும். இந்த யாத்திரைக்காக  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த ஆண்டு முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்யாத பக்தர்களும் அமர்நாத் யாத்திரைக்கு வருவதால், இந்த ஆண்டு 2 முதல் 3 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், யாத்திரையை சீர்குலைக்கும் வகையில், 100 முதல் 150க்கு மேற்பட்ட பக்தர்களை கொல்லவும், 100க்கு மேற்பட்ட போலீசாரை கொன்று குவிக்கவும் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



    இதுதொடர்பாக விளக்கி எழுதப்பட்ட கடிதம் அனைத்து தலைமை அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் அந்த கடிதம் வைரலாக பரவி வருகிறது.

    யாத்திரைக்கு வரும் வாகனங்களை தீக்கிரையாக்க தீவிரவாதிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் ஏற்படும் பதற்றத்தை கொண்டு நாடு முழுவதும் மோதல்களை ஏற்படுத்தவும் திட்டம் தீட்டியுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமர்நாத் யாத்திரையின் முதல் கட்டமாக 4 ஆயிரம் பேர் கொண்ட குழுவினர் புறப்பட்டு செல்கின்றனர். பஹல்காம் மற்றும் பால்டால் என்ற இரு முகாம்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மாநில துணை முதல்வர் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    இதையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ராணுவத்தினர், போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் சிஆர்பிஎப் படையினர் என 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.    

    இதுதொடர்பாக, சி.ஆர்.பி.எப். படைப்பிரிவின் சிறப்பு அதிகாரி ஸ்ரீவத்சவா கூறுகையில், ’’உளவுத்துறை கொடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். இது எங்களுக்கு மிகவும் சவாலானது.



    பயணிகள் தங்கும் முகாம்களில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருப்பதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அனைத்து முகாம்கள், ரெயில் நிலையங்கள், அமர்நாத் லிங்கத்தை சென்று தரிசிக்கும் பாதை ஆகியவற்றில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×