search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு தேடி வரும் டீசல் திட்டம்: பெங்களூரில் விரைவில் தொடக்கம்?
    X

    வீடு தேடி வரும் டீசல் திட்டம்: பெங்களூரில் விரைவில் தொடக்கம்?

    வாடிக்கையாளர்களின் வசதிக்காக தொலைபேசி மற்றும் இணையதளத்தில் பதிவு செய்தாலே போதும், இனி டீசல் வீடு தேடி வரும் என பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
    பெங்களூர்:

    இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வாகனம் வைத்துள்ளனர். அதில் பெட்ரோல் அல்லது டீசலை நிரப்புவதற்காக தினமும் பெட்ரோல் பங்கில் வரிசையில் நிற்க வேண்டிய நிலையை எண்ணி புலம்புகின்றனர்.

    இவர்களது கவலையை போக்க, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ‘மை பெட்ரோல் பம்ப்’ என்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது. தங்களின் இணையதளத்தில் அல்லது தொலைபேசி எண்ணில் பதிவு செய்தால் போதும், பெட்ரோல் அல்லது டீசல் இனி வீடு தேடி வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வாடிக்கையாளர்கள் mypetrolpump.com அல்லது 7880504050 என்ற தொலைபேசி எண்ணில் பதிவுசெய்ய வேண்டும். ஒவ்வொரு பதிவுக்கும் குறைந்தது 20 லிட்டராவது இருக்க வேண்டும். சுமார் 100 லிட்டர் டீசல் வரை வீடு தேடிவந்து தருவதற்கான கட்டணமாக 99 ரூபாய் வசூலிக்கப்படும். நூறு லிட்டருக்கு மேல் தேவைப்பட்டால், அதிகரிக்கும் ஒவ்வொரு லிட்டருக்கும் ஒரு ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படும்.

    இந்த சேவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். பள்ளிகள், மருத்துவமனைகள், வாடிக்கையாளர்கள், அபார்ட்மெண்ட்ஸ், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு இந்த சேவை பயனளிக்கும். ஹெச்.எஸ்.ஆர் லே அவுட், கோரமங்களா, பெல்லாந்தூர், பிடிஎம் லேஅவுட் மற்றும் பொம்மனஹள்ளி ஆகிய பகுதிகளில் முதல்கட்டமாக இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது என நிறுவனத்தினர் தெரிவித்தனர்.


    இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரி யாதவ் கூறுகையில், "வாடிக்கையாளர் வீடுகளுக்கு எரிபொருள் கொண்டு செல்வதற்காக நாங்கள் யாருக்கும் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. இது மிகவும் ஆபத்தானது. எனவே மாநில போலீசார் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டார்.

    பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாமல் இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. இதில் அதிகளவு ஆபத்து உள்ளது என இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஊழியர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்த பின்னரே, வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு எரிபொருள் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என மை பெட்ரோல் பம்ப் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

    ஏற்கனவே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், வரும் காலங்களில் வாகன எரிபொருள்கள் வீடு தேடி வரும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×