search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.எஸ்.இ., கல்விக்கொள்கையில் மத்திய அரசு தலையிடாது - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேட்டி
    X

    சி.பி.எஸ்.இ., கல்விக்கொள்கையில் மத்திய அரசு தலையிடாது - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

    சி.பி.எஸ்.இ., கல்விக்கொள்கையில் மத்திய அரசு தலையிடாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ., கல்விக்கொள்கையில் மத்திய அரசு தலையிடாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

    வழக்கத்துக்கு மாறாக மிகக்கடினமான கேள்வித்தாள் கொடுக்கப்பட்டுள்ளது என்று மாணவர்களால் கருதப்படுகிறபோது, மாணவர்கள் மீது கருணை காட்டி தாராளமாக மதிப்பெண் வழங்குவது மிதமான கல்விக்கொள்கை என்று கருதப் படுகிறது.

    ஆனால், சி.பி.எஸ்.இ., மற்றும் 32 பிற கல்வி வாரியங்கள் ஒருமித்த கருத்தை எட்டிய நிலையில், மிதமான கல்விக்கொள்கை கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது.

    ஆனால் இது தொடர்பான ஒரு வழக்கில், இந்த மிதமான கல்விக்கொள்கையை சி.பி.எஸ்.சி., தொடர வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும், “சி.பி.எஸ்.இ., எடுத்துள்ள முடிவு (மிதமான கல்விக்கொள்கையை கைவிடுதல்) மாணவர்களிடம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். விளையாட்டு தொடங்கி விட்ட பிறகு விதிமுறைகளை மாற்ற முடியாது. தேர்வுக்கு மாணவர்கள் பதிவு செய்து விட்ட பிறகு, கருணை மதிப்பெண்கள் வழங்கும் முறையை கைவிடுவது சரியானதல்ல” எனவும் கூறியது.

    இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது பற்றி சி.பி.எஸ்.இ., பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி ஒரு நடவடிக்கையை சி.பி.எஸ்.இ., மேற்கொண்டால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும்; தேர்வுமுடிவுகளை வெளியிடுவதையும் தாமதப்படுத்தி விடும் என்று சட்ட வல்லுனரால் சி.பி.எஸ்.இ.க்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், மிதமான கல்விக்கொள்கையை பின்பற்றித்தான் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டு உள்ளது.

    இந்த நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்த மிதமான கல்விக்கொள்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த பிரகாஷ் ஜவடேகர், “மிதமான கல்விக்கொள்கை பிரச்சினையில் நாங்கள் தலையிட மாட்டோம். இது கல்வி தொடர்பானது. இது தொடர்பாக கல்வி வாரியங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்” என்று திட்டவட்டமாக கூறினார்.

    மேலும்,“ கல்வி வாரியங்கள்தான் ஒன்றுடன் ஒன்று ஆலோசனை நடத்தி முடிவு எடுத்துள்ளன. எனவே அவைதான் இனியும் முடிவு எடுக்கும். ஆனால் வரும் கல்வி ஆண்டின் இடையே எந்த மாற்றத்தையும் திடீரென நடைமுறைப்படுத்தினாலும், அது புத்திசாலித்தனமாக இருக்காது என்று நான் நம்புகிறேன்” என்றும் அவர் கூறி உள்ளார். 
    Next Story
    ×